நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது!
ஆக்கம்: ஊடக அறிக்கை
தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப்போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார்.
வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சூடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சூடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின் போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன், தென்சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள்.
வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.
1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது.
அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.
திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சூடானிய மக்களுக்கும் அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும்;, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்"என்று மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - தை 18, 2011
பிரசுரித்த நாள்: Jan 18, 2011 10:42:35 GMT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக