வெள்ளி, 15 ஜூன், 2012

பல நாடுகளில் டெசோ வேண்டும் :சண்டே இந்தியனில் நந்திவர்மன்

நந்திவர்மன்,பொதுச்செயலாளர்,திராவிடப் பேரவை



பல ஆண்டுகளாக இணையத்தில் அகில இந்திய டெசோ என்ற பிளாக்கை நடத்திவருகிறேன். இந்திய மண்ணில் புலம்பெயர்ந்த திபெத் அரசு தர்மசாலாவில் இயங்குகிறது. திபெத்திய பாராளுமன்றம் உள்ளது. 2009&ல் இத்தாலியப் பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 267 திபெத்திய ஆதரவுக் குழுக்கள் பல நாடுகளில் செயல்படுகின்றன. 267வது குழுவாக இலங்கையிலேயே ஆதரவுக்குழு இயங்குகிறது.

அதுபோல கலைஞர் மீண்டும் புத்துயிர் ஊட்டிய டெசோ தமிழ்நாட்டில் மட்டுல்ல, உலகின் பல நாடுகளிலும் உருவாக வேண்டும். 1998&ல் டெல்லியில் தோழர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனைத்துலக ஈழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தினார். 2006&ல் ஆல் இந்தியா டெசோ என்று உருவாக்கி ஈழப்பிரச்னை பற்றி கண்திறப்புக் கருத்தரங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டோம். நடக்கவில்லை. கடந்த முறை டெசோ தொடக்க மாநாட்டில் மதுரையில் பேசிய கலைஞர் உலக நாடுகளுக்கெல்லாம் ஈழப்பிரச்னையை கொண்டு செல்வோம் என்றார். மீண்டும் புதுப்பிக்கப்படும் டெசோ குறைந்த பட்சம் டெல்லியிலாவது மாநாட்டைக் கூட்டவேண்டும். தமிழ்நாட்டுக் குள்ளேயே மாநாடுகள், போராட்டங்கள் என்று சுருக்கிக்கொள்வது ஈழப் பிரச்னையை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புரியவைக்காது.

சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய ஒன்றியங்கள் உடைந்தபோது 1994 அளவில் 19 புதிய நாடுகள் பிறந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா &இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. இந்த நிகழ்வுகளின்போது ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள நாடுகள் ஹெல்சிங்கி மாநாடு கூட்டி புதியதாக உருவாகும் நாடுகளை அங்கீகரிக்க வழிமுறைகள்/வரையறைகள் வகுத்து அதன்படி மேற்சொன்ன நாடுகளை அங்கீகரித்தனர்.

அதே அளவுகோள்படி, 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளுக்கு சுதந்தரம் கிடைக்கச் செய்த ஐக்கிய நாடுகள் முன், உதாரணப்படி தமிழ் ஈழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க உலகின் பல நாடுகளில் டெசோ அமைப்பு உருவாக வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்றப் பிறகு ஜனநாயக வழிமுறைகளை ஏற்று மக்கள் தேர்வு செய்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசையும் இந்தியாவில் இயங்கும் புலம்பெயர்ந்த திபெத்திய அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க டெசோ வாதாட வேண்டும்.

பொது வாக்கெடுப்பு மூலம் நியூஸிலாந்தின் கடைசிக் காலனியான 644 பேர் வாழக்கூடிய அடோல் ஆல் அட்டாஃபுக்கு சுயாட்சி வழங்கிய ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கும், திபெத்துக்கும் வழங்குமாறு டெசோ வலியுறுத்தவேண்டும். கலைஞரின் முயற்சி தமிழ்நாட்டுடன் நிற்கக்கூடாது. அவர் மேற்கொண்டிருக்கும் இந்த டெசோ இப்போதைக்கு காலத்தின் தேவை என்றுதான் நான் கருதுகிறேன். 2009 காலகட்டத்தை மறந்துவிட்டு அடுத்து நடக்கவேண்டியதை யோசியுங்கள்!