சனி, 3 ஏப்ரல், 2010

அண்ணா நினைவேந்தல் பொழிவு

புதுச்சேரிப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் 5.10.2000 த்தில் நடத்திய தமிழக அரசு அமைத்துள்ள அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவில்
நா. நந்திவர்மன், பொதுச்செயலாளர் திராவிடப் பேரவைதலைமையுரை


அறிஞர் அண்ணா வாழும் காலத்தில் மட்டும் அல்ல. மறைந்த பின்னரும் சாதனைகளைச் செய்து காட்டியவர். சாகாப் புகழையீட்டியவர் அவர் மறைவுக்கு:

எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றும்

பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே

உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்

அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர்அளவுமுண்டோ?

என்று பைந்தமிழ் வாழுலகின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடினார்! அண்ணா மறைவுக்கு வாடினார்.

அறிஞர் அண்ணாவின் மறைவு உலகிலேயே பேரளவில் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றமைக்காக Guinness Book of World Records களில் இடம் பிடித்தது. அவர் மறைவன்று நானெழுதிய கவிதை பல்லாண்டுகள் கழித்து 1976 பிப்பவரி 3 அன்று முரசொலியில் நெருக்கடி நிலையில் வெளியாயிற்று.

"விழிநீராலே நோயினையே விரட்டுதல் முடியுமென்றால்

வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன், வியன்தமிழில்

கவிதைகளைப் பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால்

கோடிகோடிப் பாடல்களைக் குவித்திருப்பேன், பாசமிக்க அண்ணனையே

அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்

அகமகிழ்ந்து அளிதிருப்பேன் அவன்நோயை எனக்களிக்கும்

வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்.

வழியில்லை அழிந்துவிட்டான், வார்த்தையின்றி தவிக்கின்றேன்."

என்று அவர் மறைவுக்கு மொழியிழந்து விழித்தேன். விழிநீரை வடித்தேன். நாடெங்கும் அவர் சிலைகள், நாள்தோறும் அவர் பெயரில் புதிய புதிய கட்சிகள், வங்கக் கடலோரமென வருணிக்கப்படும் தங்கத்தமிழர் கடலருகில் அவர் கல்லறை!அதை கோயிலாக்கிச் சூடம் ஏற்றும் சுயமரியாதைச் சுடர்கள். எண்ணாயிரம் கோடித் தமிழ் உள்ளங்களில் அன்றிருந்த என் தலைவன் கொடிகளிலே படமாக அசைந்தாடுகின்றான். முச்சந்திகளிலே காக்கைகளின் எச்சில் மழையில் நனைந்து கதிரவனின் வெப்பத்தால் கருகி மெருகிழந்து நிற்கின்றான்.

ஆ னால் இந்த கணினி யுகத்தில்உலகளாவிய வலைத்தளங்களில் அண்ணாவைப் பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளே உள்ளன. அந்த பதிவுகளை செய்த ஒரு சிலராவது அண்ணாவை மறவாதிருப்பது மனத்துயருக்கு மருந்தாகிறது. அவரின் கொள்கைகளை குப்பையிலே வீசிவிட்டு அவரின் கருத்துக்களை கண்டும் காணாமல் சீர்குலைந்து சிறுமைப் படுத்தி தங்களை முன் நிறுத்துவதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர்.

அண்ணா எண்ணிய தமிழின ஒருமைப்பாட்டுணர்வு முன்னிலைப்படுத்தப் படவில்லை. அவரின் பகுத்தறிவுப் பயணத்தை திசைமாற்றியவர்கள் பக்தர்களாக வேடம் கட்டுகிறார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் அறிஞர் அண்ணாவை எண்ணி வியக்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

 அந்த தமிழர்களை தமிழ்த்தேசம் என்ற உலகளாவிய வலைப்பின்னல் தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அண்ணாவின் பரம்பரை என்பது ஆரியமாயைக்கு அடிமையானவர்கள் அல்ல. அண்ணாவின் வழியினர் என்பது கம்பரசம் பருகி போதையில் ஆழ்ந்து புத்தியை தொலைப்பவர்கள் அல்ல! மாஜி கடவுள்களை எழுத்தால் அடையாளம் காட்டிய அண்ணாவின் பிறங்கடைகள் மூகாம்பிகைகள் முன்பு மூங்கையினர் ஆயினர். பணத்தோட்டம் தீட்டி பொருளியல் சுரண்டலைச் சாடி அண்ணா பெயரால் ஆட்சிகளில் அமர்ந்தவர்கள் பன்நநட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கினார்கள். தீ பரவட்டும் என மடமை இருளைச் சுட்டெரித்த மாமேதை பெயரால் அரசியலில் அங்காடிகள் திறந்தவர்கள் மூடப்பெருநெருப்பில் குளிர் காய்ந்து மஞ்சள் வண்ணங்களில் மங்கலம் தேடினார்கள். கறுப்பை சிகப்பை, கழகங்களின் உயிர்த்துடிப்பை, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரெனப் பெரியாரைப் போற்றிய பேரறிஞரின் கொள்கைப் பிடிப்பை குலைத்தார்கள். ஆனால் சப்பான் நாட்டில் வாழும் Sacho Sri Kantha தனது Anna’s Legacy மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைகளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும் இருக்கிறார் ஈழநாட்டுப் தம்பியர் இனமானங்காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம்நெஞ்சில் பாய்ச்சுகிறார்.

"If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Rooseveltian and Leninist - Stalinist ideals also have met the same fate in their places of origin. However, Gandhian ideals were picked up by Martin Luther King Junioor in America and these led to advancement of civil rights for Blacks in the 1960s. The liberal - democratice ideals of Roosevelt got rooted (however imperfectly) and supplanted the existing feudalistic social arrangement in Japan. Even the Leninist - Stalinist ideals found roots in Cuba under the leadership of Fidel Castro in 1959 and is still not supplanted, despite aggressive bullying by Yankee capitalism Similarly, though Anna’s ideology of a ‘Separate state for Tamil’s became a lost cause in India, it did become a rallying cry for the younger generation of Eelam Tamils in mid 1970s. Thus, Anna’s legacy lives in Eelam."

அண்ணாவின் திராவிடத் தேசியம் தோல்வியடைந்தது என்று கணக்கிடப்பட்டால், காந்திய, ரூசுவெல்டிய, இலெனின் , இசுடாலினிய கொள்கைகளும் தோன்றிய மண்ணில் தோல்வியையே தழுவியுள்ளன. ஆனால் காந்தியக் கொள்கைகள் மார்டின் லூதர் கிங்கால் அமெரிக்க நாட்டில் கைக்கொள்ளப்பெற்று 1960 களில் கறுப்பரின மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கப் பயன்பட்டன. ரூஸ்வெல்ட் அவர்களின் தாராள மக்களாட்சிக் கோட்பாடுகள், சப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சமுதாய ஏற்பாட்டை பெயர்த்தெடுத்து அதற்குப் பதில் நிலை பெற்றன. இலெனினிய இசுடாலினிய கொள்கைகள் 1959 அளவில் பிடல் காசுடிரோ தலைமையில் கியூபாவில் வேரூன்றின. அமெரிக்க முதலாளியம் அதிதீவிர நெருக்குதல் தந்தும் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் கியூபாவில் நிலைபெற்றுள்ளன. அதே போல் தமிழர்களுக்கென்று தனித்தாயகம் வேண்டும் என்ற அண்ணாவின் வேணவா இந்தியாவில் நிறைவேறாமல் போயிருப்பினும் 1970 களில் ஈ£த்தமிழரின் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் மையமாக மலர்ந்தது! இவ்வாறே அண்ணாவின் பாரம்பரியம் ஈழத்தில் வாழ்கிறது." என்கிறார் அக்கட்டுரையாளர்! 20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழரை இனங்காட்ட உருவான வலைத்தொகுப்பின் உட்பிரிவு இக்கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது.

10.9.2000 அன்று கணினி வழியே கவின் தமிழை வளர்க்க ஆற்றத்தகு கடமைகள் பற்றிய கருத்தரங்கில் மூவாயிரம் பக்கங்களை கொண்ட தமிழ் வலைத்தொகுப்பில் அறிஞர் அண்ணாவிற்கு தனியாக வலைத்தளம் இல்லை என நான் வருந்தி இருந்தேன். இதனை தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பு tamilnation.org என்ற முகவரியில் Tamil and Digital Revolution உட்பிரிவில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய வலைப்பக்கங்களில் அண்ணாவை எந்த ஒரு தேடுபொறி மூலம் தேடினாலும் தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையே கண்முன் தோன்றுகிறது. அதிலே சப்பான் நாட்டு தமிழ் அறிஞர் கட்டுரையை தவிர்த்து அறிஞர் அண்ணாவைப் பற்றி இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. அதை எழுதியவர் இன்று அண்ணா பெயரால் அரசியல் அங்காடிகளை வெற்றிகரமாக நடத்துவர் வரிசையில் இடம்பெற்றவர் அல்ல. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு திரு. ஏ.பி. சனார்த்தனம் எம்பி. 1981 இல் எழுதிய கட்டுரை அது.

அண்ணாவை இழந்து பெருஞ்சித்திரனார் பாடியவாறு எண்ணாயிரம் கோடி உள்ளம் அழுததே, அவர்களில் அண்ணாவின் புகழை வலைத்தளங்களில் நிலைநிறுத்த தொலைக்காட்சிகளில் அண்ணாவின் கொள்கைகளுக்கு குரல் கொடுக்க, ஆட்கள் அருகிவிட்டனர் என்பது வெள்ளிடமலை.

தொலைக் காட்சிகளை அறிவியல் தமிழ்க்குப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தை சினிமா நடத்தப்பெறுகிறது. அதில் சி.என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கிய படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களின் என்ன கூறப்பட்டுள்ளது?

வாழ்க்கை வரலாறு 1909 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் திரு. நடராசன் பங்காரம்மாளுக்கு மகனாக ஒரு நடத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். "சென்னை கோவிந்தப்பன் பள்ளியில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு." ஈ.வே. இரா. (இராமசாமிப்பெரியார்) பற்றாளராகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். (இது 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது). குடியரசு ஏட்டியில் துணையாசிரியராக பணியாற்றினார். 1942 திராவிட நாடு தமிழ் வார ஏட்டை துவக்கினார். 1949 தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் 15 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது. அண்ணா எதிர்கட்சி தலைவர் ஆனார். 1959 உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கழகம் அதிக இடங்களை வென்றது. 1962 மாநில சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். 1968 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 3பிப்ரவரி 1969 புற்றுநோயால் இறந்தார்.

பெருவாழ்வு வாழ்ந்த அந்த பேரறிஞர் பற்றிய வாழ்க்கை பதிவு இவ்வளவுதான் அதற்காக வருத்தப்படுவதா? இல்லை அண்ணாபெயரை தினம் சொல்லும் ஆளும், எதிர்க்கட்சிகளும் செய்யாத ஒரு வரலாற்றுப் பதிவை இந்த மட்டுமாவது செய்தனரே என தமிழ் மின்னியல் நூலகத்தாரை பாராட்டுவது தெரியவில்லை. அடுத்தபடியாக சில வரிகளே சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிகளை மேற்கோள்காட்டக்கூட நம்மால் முடியாது. படிஉரிமைச் சட்டப்படி இன்தாம்காம் ஒப்புதல் பெறாமல் ஒரு வரிகூட நாம் எடுத்தாள முடியாது.

அண்ணாவை உரிய முறையில் பதிவு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல நான் பொதுச் செயலாளர் ஆக உள்ள திராவிடப் பேரவையும் தவறிழைத்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டு இருக்கிறோம். வலைத்தளங்களில் அண்ணாவின் நூல்கள், பாராளுமன்ற சட்டமன்ற பேச்சுக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். அண்ணாவைப்பற்றிய ஆய்வுகள் தொகுப்படவேண்டும். அரசே அண்ணாவின் முழுத்தொகுதிகளை வெளியிடவேண்டும் இல்லையேல் பல்கலைக்கழகங்களாவது இதை பதிப்பிக்க வேண்டும் வலைத்தளங்களில் ஏற்றவேண்டும். முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வோர் வலைதளங்களில் அண்ணா உள்ளிட்ட தமிழ் அறிஞர் மற்றும் தமிழ் இலக்கியப் பதிவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆற்றிய பேருரைகள் இன்றும் தமிழர் நினைவு கூறத்தக்கவை. நிலையும் நிணைப்பும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அந்நாளில் பேசியதில் சில "தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களை பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள் பச்சைப் புற்றரைக்கும பஞ்சமான நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதிலே தமிழ் நாட்டிலே உள்ள மாந்தோப்புகளும். மண்டபங்களும், சாலைகளும், சோலைகளும், குன்றுகளும், கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களை தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து கேட்டு இருப்பார்கள் மெல்லிய அடையணிந்து இருக்கிறீர்களே அது ஏது என்று? தமிழர்கள் அது எங்கள் கைத்திறமை இந்திரன் தந்த வரப்பிரசாதம் இல்லை என்ற கூறியிருப்பார்கள். இமையம் வரை சென்று உங்களது இலச்சினையை பொருத்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டு இருப்பார்கள். அதற்கு தமிழர்கள்அது கருவாழ்வார் கபாட்சத்தால் அல்ல! எங்கள் தோள் வலிமையினால் என்று கூறியிருப்பார்கள். இன்றும் உங்களது இசையின்பமாக இருக்கிறதே அது எப்படி என்ற ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து கேட்டிருப்பார்கள். அதற்கு தமிழர்கள் நாரதர் மீட்டிடும் தேவகானம் அல்ல! நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப்பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது? என்று கேட்டிருப்பார்கள். அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்தது அல்ல என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப்பார்த்து அது என்ன என்று கேட்டிருப்பார்கள் அது தேவலோகச் சரக்கல்ல! எங்கள் தீரர்கள் கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து என்று கூறி இருப்பார்கள். தமிழர்களின் அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும் என்று பழங்காலத் தமிழகத்தை ஏக்கத்தோடு படம் பிடித்தார் அண்ணா.

இக்காலத் தமிழகத்தை அண்ணா படம் பிடிக்கிறார்.

"விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்று இருக்காது. நான் இதோ பேசுகிறேன், என் முன் ஒலிப்பெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதை பெரிதாக்கி நாலா பக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும் படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறியிருப்பார்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டிருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கப்பல் கனமாக இருந்தும் அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிபாருங்கள். ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். அல்லது ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறி பாருங்கள். ஆச்சரியமாக கேட்கமாட்டார்கள்! அவைகளில் அதிசயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றாது! அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும் மறுகணம் அதை மறந்து விடுவார்கள்!
அற்புத சக்தியிடம் உள்ள அபாரநம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடம் இருக்காது. விஞ்ஞானத்திடம் அவர்களுக்கு மதிப்பும் இருப்பதில்லை. காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினை கண்டுபிடித்தவர் எங்கள் தாத்தா, மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எங்கள் மூதாதையர் என்று இருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பை பார்க்காமல் கேலி கண்டனங்களை பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல மூளை குழம்புமே, கண் குருடாகுமே, கால் முடமாகுமே என்று யோசிக்காமல் கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும் கஷ்டப்படவில்லை. கஷ்டப்பாடாமல் சுகம் எப்படித்தெரியும்? ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோபிளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிகட்டிபோல், குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.

மதிப்புற்றிருக்கவேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லது அல்ல! விஞ்ஞானம் மதிப்புபெற மாணவர்கள் உழைக்க வேண்டும்! மாணவர்கள் மக்களிடத்தில் சென்று அவர்கள் மனதில் உள்ள மாசை நீக்க வேண்டும். மனதில் உள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டு பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனது தௌ¤வடைவர் அறிவை போற்றுவார்கள்! அஞ்ஞானத்தை கைவிடுவார்கள். உண்மையை நம்புவார்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்!

அண்ணா மாணவர்களுக்கு கூறி மாணவர் அணிதிரட்டி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி, அவர் மறைந்த போனபிறகு நெருக்கடிக்காலத்தில் பகுத்தறிவுப் பணி முடக்கப்பட்டதை நினைவூட்டி மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டி 3.10.76 கழகக்குரல் வார ஏட்டில் நான் எழுதியதில் இருந்து சில வரிகள்.

இந்த நிலையில் ஓர் ஏக்கம் இன்னமும் அரைத்த மாலையே அரைப்பது போல காதலையும், மோதலையும் கருப்பொருளாக்கிக் கதைவாணர்கள் தமிழில் எழுதிவரும் நிலைக்கண்டு எழும் நெஞ்சின் வேதனையில் வடிக்கப்பட்ட ஒரு சொல்! விஞ்ஞானக்கதைகள் கற்பனைகள் தமிழ் மொழீயில் இல்லையே என்ற குறை இன்னமும் நீடிக்கலாகாது. தி.மு.கழகத்தின் எழுத்தாளர் பட்டாளம் எதிர்காலத்திற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை இந்த குறிக்கோளை செயல் ஆக்குவது தான்"

எவரும் அந்த குறிக்கோளை நிறைவேற்றவில்லை நானும் செய்ய தவறினேன்.
"விஞ்ஞான கற்பனையை எழுத்தாளர்கள் மேலைநாடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள் இது, விஞ்ஞானியர் முயற்சி வெற்றி எய்தத் துணையாக தூண்டுகோலாக அமைகிறது.

இங்கோ கடவுளரின் காமக்களியாட்டங்களைக் காசாக்கிக் காவியமாக்கிய காலம் போய் இன்று கடை காட்டி இடை காட்டிக் கச்சிறுகும் புன்மார்பின் பிதுக்கம் காட்டி கணிகையர்கள் ஆடுதலைக் கலையென்று காட்டி அவர் உடை நீக்கி உறுப்பெலாம் காட்டுதலை எழுத்தாக்கிப் பிழைப்பதையே தொழிலாக்கி எழுத்தின் தரத்தை இழித்திடுவார் செழித்திடுவார்செந்தமிழ மண்ணில்!

காலைக் கதிரழகைக் கண் விழித்தும் பாராமல் மேலைச் செழுவானின் மாணழகை நோக்காமல் இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இலங்கிடும் எழிலை எண்ணாமல், விரிவானை, விண்வெளியை, மண்ணிற் புதைந்திருக்கும் கனிச் செல்வத்தை அதனைப் பெற்று இந்தப் பாரெய்த வேண்டிய மேம்பாட்டை, பண்பாட்டை நினைக்காமல், மங்கை முகத்தழகு மட்டுமே நினைப்பதும், பெண் பின் ஓடுவதிலேயே பொழுதினைப் போக்கவதுமாக ஒரு வேலையற்ற வீணர் கூட்டத்தை இன்று எழுத்துலகும் சேர்ந்து உருவாக்கி விட்டது! நேர்ந்த தவற்றை நிவர்த்தி செய்து, நல்வழியைக் காட்டக் குறிக்கோளோடும் கொள்கையோடும் எழுத்தாளர் முனைய வேண்டும்.

தமிழ்நாட்டை மொழி வழி மாநிலமாக பிரித்த பிறகும் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே காங்கிரஸ் ஆட்சியிலே அழைத்து வந்தார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தபோதும் காங்கிரசார் கற்பாறைப் போல் நின்றார்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டால் தமிழ் தேசியம் வென்று விடும் இந்திய ஒன்றியம் உடைந்து விடும் என்று வீணான அச்சம் பச்சைத் தமிழரை வாட்டிவதைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பூபேசு குப்தா அவர்களை தமிழர்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஏனெனில் அவர்தான் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட அரசியல் சட்டத்தின்முதல் அட்டவணையில் உள்ள ஏழாவது பதிவை திருத்தம் செய்யவேண்டும் என்று 1961 இல் பாராளமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தவர் ஆவார்கள். பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தின் மீது அறிஞர் அண்ணா அவர்கள் மே 1963 இல் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்கது. அண்ணா பேசுகையில் குறுக்கிட்டு பேசிய நா. மகாலிங்கம் இந்த பெயர் மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் விளைய போகிறது-? என்று கேட்டார். அதற்க பதில் அளித்த அண்ணா பாராளுமன்றத்தை லோக்சபா என்று அழைத்தபோதும், மாநிலங்கள் அவையை ராஜ்யசபா என்று அழைத்தபோதும் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள் அதே பயனை மதலாஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றப் பெறும்போது அடையும் என்றார்.

அந்த தீர்மானம் காங்கிரசு பெரும்பான்மை பெற்றிருந்த பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் மொழி உணர்ச்சியால், மூண்டெழுத்த சினத்தீயில் காங்கிரசை சுட்டெரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றப் பிறகுதான் தமிழ்நாடு தமிழநாடாக பெயர் மாற்றம் பெற்றது! பல்வேறு மாநிலகளின் ஒன்றியமான இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் தனக்குரிய பெயரை சூட்டிக்கொள்ள எவ்வளவு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது! தமிழ் தேசியம் உலகின் மூத்த மொழி குடும்பத்தின் பண்பாட்டு மீட்சிப் போரை உள்ளடக்கியதாகும். அப்போருக்குரிய மறவர்களாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விலைவாசிப் போராட்டத்தின் போது பெரும அளவ கைதியானாலும் மன்னிப்பு கோரி பிணையில் வெளிவந்தனர். அந்த பின்னணியில் தான் சீன போரின் போது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டார்கள்! அது கோழைத்தனம் அன்று. கையில் கிடைத்த திராவிட முன்னேற்றக் கழகமாம் கருவியை கொண்டு இயன்றவரை தமிழ்ப் பண்பாட்டு மீட்சிப் போரை முன்னெடுத்து செல்ல நாணலை போல் வளைந்து கொடுத்தார் அண்ணா.

அண்ணா தமிழர்களை பண்படுத்த தமிழ் வென்றெடுக்க கூடிய வீரர்களாக தமிழர்களை உருவாக்க கால அவகாசம் தேவை என்று கருதியே வளைந்து நௌ¤ந்து கொடுத்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்து பிறகு அறிவு மயக்கும் அகற்றும் அறிவியக்கம் என்ற தலைப்பில் நம் நாடு இதழியல் 12.2.78 அன்று எழுதியதை மீண்டும் உங்கள் முன் நினைவூட்டுகிறேன். இருபத்திரெண்டு ஆண்டுகளுக்க முன்பு நான் எழுதிய கட்டுரை. அன்று கலைஞர் ஆட்சியில் இல்லை. இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்! அவருக்கு பின்னால் அண்ணாவின் எழுத்தை உள்வாங்கி நான் எழுதினேன்! அண்ணா நம்மை எல்லாம் எதற்காக உருவாக்கினார் என்பதை நினைவூட்டினேன். ஆனால் கலைஞரோ, கழகமோ தமிழக அரசோ, தமிழகத்தை ஆண்ட ஏனைய திராவிடக் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை தமிழகம் அப்படியே இருக்கிறது. இதை அண்ணாவின் மொழியில் சொல்வதானால். ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே!

வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று ! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலக சிற்பிகளைப் போற்ற என்று மாணவரிடத்திலே அண்ணா மன்றாடினார். அவர் உள்ளே விடுதலை நெருப்பு அனையாமல் எரிந்தவண்ணம் இருந்தது. அந்த விடுதலைக் கனவை பிரிவினை தடைச் சட்டம் வந்த பிறகு அரசியல் தந்திரங்களுக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு அது பற்றி தம்பிகளுக்கு விளக்க அவர் எழுதிய இன்பஒளி நாடகத்தில் இப்படி சொல்கிறார்.

விடுதலை என்ற பேச்சு அளித்திடும் இன்பத்துக்கு ஈடாக வேறு ஏதும் இருந்திட முடியாது. பெற்றோம் விடுதலை என்று கூறிடும் போது மகிழ்ச்சி மட்டும் அல்ல, எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்பதனை நினைவில் கொண்டிடவும் அதன் பயனாக எழுச்சி மிக கொண்டிடவும் முடிகிறது. எழுச்சியுடன் நிற்பது இல்லை. பெற்றோம் வாழ்வு என்ற நம்பிக்கையையும் கருதுகிறது. எனவே எதிர்காலம் தெரிகிறது. எழில் தெரிகிறது ஏற்றம் தெரிகிறது. மங்கிய கண்கள் ஒளிவிடவும் வாடிய முகம் எல்லாம் மலர்ந்திடவும். என்றார் அண்ணா.

அண்ணாவை நினைத்து அவர் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக