திங்கள், 13 ஜூன், 2011

மொழிவழியாக மனித வரலாற்றில் பின்னோக்கிப் பயணம் செய்கிறோம்’’

பனிரெண்டாயிரம் பக்கங்கள். சுமார் ஐந்து லட்சம் தமிழ்ச்சொற்கள். 31 தொகுதிகள்... 37 ஆண்டுகளாக நடந்துவந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) இப்போது முழுமை எய்தியுள்ளது. பாவாணர் தொடங்கிய இத்திட்டமானது பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது. மூத்த தமிழறிஞரான மதிவாணன் என்.அசோகனுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
இந்த சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள்?

ஒரு சொல்லின் வேரை ஆராய்வதற்கு பலமொழி அறிவு தேவை. எனவே சேலம் கல்லூரியில் பணிபுரிந்த எனக்கு பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் பாவாணர் அவர்களிடம் இத்திட்டத் தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. இன்று 37 ஆண்டுகள் இப்பணியில் கழித்தும் உள்ளேன். வட இந்திய மொழிகளில் உள்ள பல வினைச்சொற்களின் மூலம் தமிழாக உள்ளது. தமிழ்தான் வேர். இந்தியில் நாளை வா என்பதை ‘கல் ஆவோ’ என்கிறார்கள். கல் என்றால் நாளை. இந்தச் சொல் சமஸ்கிருதம், பெர்சியனில் இல்லை. குஜராத்தியில் இதை கால் ஆவோ என்கிறார்கள். ஒரியாவில் காலி ஆவோ என்கிறார்கள். தமிழில் காலையில் வா என்கிறார்கள். ஆக, இந்த காலைதான் இப்போது கல் ஆகியிருக்கிறது. எனவே வட இந்தியா முழுக்க ஒரு காலத்தில் தமிழ் பேசுகிறவர்கள்தான் இருந்தனர் என்றும் காலப்போக்கில் அது பிராகிருதமாகவும் பாலியாகவும் திரிந்தபோது சொற்கள் திரிந்துபோய்விட்டன என்று கூறலாம். அந்தச் சொற்களுக்கு வேர்மூலம் காணவேண்டுமென்றால் இந்த தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காணலாம்.

இதன் பயன் என்ன? இன்று இருக்கும் பல மொழிகள், சொற்கள் எங்கிருந்து பிரிந்து வந்தன? இந்தி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகள் எங்கிருந்து உருவாயின?

இந்த மொழிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தன என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.

 சொற்களை காலத்தால் மீட்டுக் கொண்டுபோனால் இவையெல்லாம் ஒரே மூல மொழியில் இருந்து பிரிந்தன என்பது தெரிகிறது.அந்த மூல மொழிக்கு தமிழ்மொழி  மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நம் முன்னோர்களின் வரலாறும் வெளிக்கொணரப்படுகிறது. இதனால் ஒருவர் மற்றொரு மொழியிடம் பற்றுகொள்ளவும் அதைப் பேசுவோரிடம் உறவுகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதில் நீங்கள் எதிர்கொண்ட சங்கடங்கள்? சவால்கள்?

பொதுவாக சில சொற்களைப் பற்றி ஆராயும்போது, அவை பிறமொழி அகராதிகளிலும் கிடைக்காது. அவற்றுக்காக மலைவாழ் மக்கள் பேசும்மொழி, சிறு திராவிட மொழிகள், நாட்டுப்புற மொழி ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கேழ்வரகைக் குறிக்கும் இச்சொல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? தமிழில் ‘ரா’ மொழியின் முதலில் வராது. இது படுகர்களின் மொழியில் உள்ளது. அவர்கள் இதை எரகி என்கிறார்கள். நான்கு இறகுகளாக கதிர் உடைவதால், அதற்கு இறகி என்று பெயர் வைத்திருக்கவேண்டும். அதுதான் ராகி ஆனது. சகோதரன் என்ற சொல் வடமொழியில் இருந்து நமக்கு வந்தது. ஆனால் அது வருவதற்கு முன்னால் தமிழர்களுக்கு சகோதரனைக் குறிக்கும் சொல் இல்லையா? தஞ்சாவூர் பகுதியில் சீர்காழியை அடுத்த ஊர்களில் வசிக்கும் மீனவர்கள் சகோதரர்களைக் குறிக்க வேறு சொல் கையாளுகிறார்கள். எனக்கு பிறவன்மார் மூணு பேர் என்பார்கள். பிறவிமார் மூணு பேர் என்பார்கள். பிறவன் என்பது ஆண் சகோதரனையும் பிறவி என்பது பெண் சகோதரியையும் குறிக்கிறது. தமிழில் உறை என்றால் தங்கியிருக்கும் வீடு. பிராகிருத மொழியில் உரா என்றால் வீடு. பஞ்சாபியில் உரா என்றால் வீடு.

எப்படி இச்சொல் அங்கே போனது? ஸ்பெயினில் பாஸ்க் மொழியில் உரா என்றால் மனைவி. வீட்டைக் குறிப்பது மனைவியைக் குறிக்குமல்லவா? உறை என்று பேசுபவர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் பிரிந்துபோனவர்களிடம் எஞ்சியிருக்கும் சொல்லாக அச்சொல் இருக்கலாம்.

இதுபோல ஏராளமான சொற்கள் உள்ளன. இதையெல்லாம் இந்த அகரமுதலியில் தந்துள்ளோம்.

கல்வெட்டு ஆய்வுகள், அகழ்வாராய்ச்சி போன்றவை எப்படி உங்களுக்கு உதவி செய்துள்ளன? நிறைய என்று சொல்லலாம். நான் சிந்துவெளி முத்திரைகள் அனைத்தையும் படித்துள்ளேன். ஐராவதம் மகாதேவனும் அஸ்கா பர்போலாவும் ஒரு முத்திரையைக் கூட படிக்க இயலவில்லை. அவர்கள் முகமதியர்கள்போல வலமிருந்து அந்த முத்திரைகளைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர். சிந்துவெளி அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில் 75 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளன. அப்படி இருப்பின் இந்திய மொழிகள் அனைத்தும் அரபியைப் போல வலமிருந்துதானே எழுதப்பட்டிருக்க வேண்டும்? அப்படியா உள்ளன? இடமிருந்துதானே எழுதுகிறோம்? சிந்துவெளி முத்திரைகள் இடமிருந்துதான் எழுதப்பட்டவை என்று நான் ஐயாயிரம் முத்திரைகளைப் படித்துக் காட்டியுள்ளேன்.

ஆனால் நீங்கள் படித்தவற்றுக்கு அங்கீகாரம் இல்லையே? ஏன்?

வலமிருந்து படிக்கவேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதை மாற்றிக்கொள்ளத் தயாராக அவர்கள் இல்லை. சரி. அப்படி முடிவெடுத்தவர்களை ஒரு முத்திரையையாவது அவர்களைப் படித்துக்காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். லைக் என்று ஆங்கிலத்தில் இருக்கும் சொல்லை எகில் என்று வலமிருந்து படிக்கமுடியுமா? முடியாது. அதுபோல்தான் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஸ்கோ பர்போலாவாலும் ஐராவதம் மகாதேவனாலும் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க இயலாது. அப்புறம் இவர்கள் அதை அசை எழுத்து(syllabic) என்று சொல்லிவிட்டு படமாகப் (pictographic) படிக்கிறார்கள். ஒரு மீன் படம் இருக்கிறது. அதற்குப் பின்னால் ஆறு கோடுகள் இருக்கின்றன. இதை அறுமீன் என்று படிக்கிறார் கள். வணிகர்கள் பயன்படுத்திய முத்திரைகளில் அவர்கள் பெயர் தானே இருக்கவேண்டும்? நான் படித்ததில் சாத்தன் என்றொரு பெயர் உள்ளது. பல பெயர்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன. கூத்தழகன் சாத்தன் என்றே வருகிறது. ‘ழ’கரமே நன்றாக உள்ளது.

சிந்துவெளி முத்திரைகளில் சிவனின் பெயர் கோ அவ்வன் என்று உள்ளது. யோக நிலையில் உள்ள சிவன். ஆரிய திராவிட நாகரிகங்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உண்டு. யாகம் செய்தது ஆரிய நாகரிகம். யோகம் அதாவது தவம் செய்தது திராவிட நாகரிகம். இப்போது யோகத்தை அவர்களும் யாகத்தை இவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிந்துவெளி நாகரிகத்தில் யோக நிலையில் சிவன் இருப்பதால் அது தமிழர்கள் நாகரிகமாக இருக்கவேண்டும். சிந்துவெளியில் அந்த சிவன் மீது கோ அவ்வன் என்று உள்ளது. கோ என்றால் மலை. மலையப்பன், கொண்டப்பன், கட்டப்பா என்கிறோம் அல்லவா? சிந்துவெளி நாகரிகத் தமிழில் அவ்வன் என்றால் அப்பன்; அவ்வை என்றால் தாய் என்று நான் சொன்னேன். ஆனால் இலக்கியத்தில் எங்குமே இதற்குச் சான்று இல்லையே என மறுத்தார்கள்.

இலக்கியத்தைவிட 2000 மூவாயிரம் ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளி. அந்த சொல் வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சொல் சங்ககாலம் வரை இருந்திருக்கிறது என்பது இப்போது புலப்படுகிறது. புதுச்சேரி பல்கலைப் பேராசிரியர் ராஜன், புலிமான் கோம்பை என்ற ஓர் இடத்தில் செய்த ஆய்வில் ஒருநடு கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களைப் படித்தார். அதில் அவ்வன் பதவன் என்று ஒரு பெயர் உள்ளது. ஆக, சங்ககாலத்திலேயே அவ்வன் என்ற பெயர் இருந்திருக்கிறது. எனவே சிந்துவெளியில் நான் படித்ததும் சரியே என்ற முடிவுக்கு வந்தேன்.

மேலை நாட்டு மொழியியல் ஆய்வுக்கும் உங்கள் ஆய்வுக்கும் என்ன தொடர்பு? அந்த கொள்கைகளை எப்படிப் பயன்படுத்திக்கொண்டீர்கள்?

அவர்கள் உலக மொழிகளுக்கு ஒரு பொது அளவுகோல் வைத்து ஆய்ந்தார்கள். ஆனால் வேர்மூலம் காண்பதில் தவறான பாதையில் சென்றுகொண்டுள்ளனர். சொற்களால் சொற்களை மீட்டமைக்கிறார்கள். ஆனால் அதற்குப் பொருள் இருக்கும் என்பதை அவர்கள் ஏற்பதில்லை. காரணம் கருதித்தான் பொருட்களுக்குப் பெயர் வைத்துள்ளனர். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்றார் தொல்காப்பியர். இந்த அடிப்படையில்தான் பாவாணர் அணுகுமுறையும் மேனாட்டவர் அணுகுமுறையும் வேறுபடுகின்றன. சொல் மூலம் மட்டும் காட்டினால் போதும் என்கிறார்கள் அவர்கள். நாங்களோ சொல் மூலத்துடன் பொருள் மூலமும் காண்பிக்கிறோம். நிழல் என்பது பழங்காலத்தில் நீழல் என்று இருந்தது. நீள்வதால் நீழல் என்று பெயர்வைத்தான் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதெல்லாம் வேண்டாம் நிழல் என்று பெயர்வைத்துவிட்டான் என்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்; காரணம் வேண்டாம் என்பது மேலைநாட்டு அணுகுமுறை. உங்கள் மொழியில் தெரியவில்லை. நீங்கள் சொல்ல இயலாது. ஆனால் எங்கள் மொழியில் தெரிகிறது. நாங்கள் சொல்கிறோம். எங்களு டைய சொற்பிறப்பியல் அகராதி, உலகில் வந்துள்ள பிற சொற் பிறப்பியல் அகராதிகளைவிட வேறு பட்ட அமைப்பு கொண்டது. மிகவும் விஞ்ஞானரீதியிலானது. சொல்லை ஆராயும்போது அதன் பொருளுக்கு முதலிடம் கொடுக்கிறோம்.

பாவாணருக்குப் பின்னால் இப்பதவியில் நீங்கள் நியமிக்கப்பட்டதற்கு பெருஞ்சித்திரனார் எதிர்ப்புத் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டதே...

பாவாணருக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் கடைசி காலத்தில் வேறுபாடுகள் வந்துவிட்டன. பாவாணரை, அவர் தன் வீட்டைக் கட்டுவதில்தான் கவனமாக உள்ளார். அகரமுதலியை மறந்து விட்டார் என்று விமர்சனம் செய்தார். இடையில் நானும் சிக்கிக் கொண்டேன். ஆனால் பின்னால் மதிவாணன் தக்கவர்தான் என்று என்னைக் குறிப்பிட்டு எழுதினார். இத்திட்டம் உருவானபோது தமிழோடு பிற மொழிகளும் தெரிந்த தமிழாசிரியர்கள் வேண்டும் என்று பாவாணர் தேடியபோது, அவரிடம் சொல்லி சேலத்தில் பணிபுரிந்த எனக்கு இவ்வாய்ப்பை பெருஞ்சித்திரனார்தான் அளித்தார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் இப்பணி முடிந்திருப்பது கண்டு பெருமகிழ்வு கொண்டிருப்பார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக