சனி, 3 ஏப்ரல், 2010

பெரியார் பெருந்தொண்டு

காரிருளில் கடும்புயலில் கலஞ்செலுத்தும் மாலுமிபோல்


கடும்போரில் கணைகளேற்றும் கலங்காத வீரன் போல்

பேரிடரை எதிர்ப்பவராய் பெரியாரே இருந்திட்டார்

பெருந்துணிவு இருந்ததனால் பெருந்தொண்டு புரிந்திட்டார்

நேரியவோர் பாதையிலல்ல நெருப்பாற்றில் நடந்திட்டார்

நெருக்கடிகள் தமக்கிடையே நிறையுழைப்பு நல்கிட்டார்

பாரிதனில் இவர்க்கிணையாய் பகுத்தறிவாளர் எவருண்டு?

பயன்கருதாப் பேருழைப்பே பெரியாரின் பெருந்தொண்டு!"



கல்லடிகள் தமையேற்றும் கருத்துரைகள் வழங்கிட்டார்

காழ்ப்புரைகள் தமக்கிடையே கடும்பயணம் செய்திட்டார்

சொல்லடிகள் தந்தவர்க்கும் சுயவுணர்வு அளித்திட்டார்

சோர்வின்றி பகையெதிர்த்து சுழன்றடிக்கும் புயலானார்

வல்லடிமைத் தனத்தையே வாழ்வெல்லாம் எதிர்த்திட்டார்

வழக்கிலுள்ள சாதீய வேரினையே அறுத்திட்டார்

கல்லுருவை கைதொழுகிற கயமையை அழித்திட்டார்

கருத்தில்லா மதங்களையே களையெடுத்து ஒழித்திட்டார்"



ஈடில்லா இவருழைப்பு இல்லாவிடில் நாமில்லை

இவர் தொண்டை மறந்தால் இருந்துமுயிர் பயனில்லை

கேடில்லாச் சமுதாயம் கீழ்த்திசையில் தோன்றிடவே

கீழ்த்தட்டு மனிதனவன் கீர்த்திபெற்று ஓங்கிடவே

வீடெல்லாம் பகுத்தறிவு விளங்கியிருள் ஓடிடவே

விஞ்ஞானச் சிந்தனைகள் வேரூன்றி வலுப்பெறவே

பாடெல்லாம் பட்டவரை பகுத்தறிவுப் பகலவனை

பாராட்ட வார்த்தையில்லை; பாராட்டா மனிதரில்லை!

விடுதலை நாளேடு 23.12.1970

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக