நந்திவர்மன் ஆங்கில நூலைப் பாராட்டி நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய கடிதம் பின் வருமாறு அன்பிற்குரிய திரு. நந்திவர்மன் அவர்கட்கு வணக்கங்கள்! இக்கடிதம் தங்கள் தமிழர் நாகரீகம் என்ற ஆங்கில நூல்குறித்தது.
நூலை வாசித்தபோது, தமிழரென சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் கைவசமிருக்கவேண்டிய ஆவணமென புரிந்தது. தங்கள் எழுத்தும் சொற்களும் இன உணர்வின்பாற்பட்டவை, போற்றுதலுக்குரியவை. எனினும் சொல்லவந்த செய்திகளை தெளிவாக முன் வைக்கிறீர்கள். சொந்த மொழி, சொந்த இனமென்ற மயக்கங்களில்லை, போதையில்லை. சொல்வது உண்மையென்பதால் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்களில் வீச்சும், பாய்ச்சலும், ஏராளம்.
சிந்துவெளி குறித்த தேசிய மாநாட்டில் வாசிக்கபட்ட ஆய்வுக் கட்டுரை ஓர் அரிதான கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டது. பழமைவாய்ந்த அப்பண்பாடும் மொழியும் திராவிடருக்குச் சொந்தமென பெருமிதத்தோடு சொல்லவந்த நீங்கள் அதற்கு உரிய சான்றுகளையும் அக்கறையுடன் சேகரித்து கட்டுரையை உருவாக்கியிருக்கிறீர்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் ஆய்வுமுடிவுகளை துணைசேர்த்திருப்பது கட்டுரைக்கு வலு சேர்க்கிறது. நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாட்டிற்காக எழுதியதென்ற குறிப்புடன் கூடிய பத்திகளும் பொதுவாகப் பல அரிதானத் தகவல்களைத் தருகின்றன. கவனத்துடன் ஆர்வத்துடனும் இரண்டாவது முறையாக வாசித்தேன். முதல்முறை வாசித்து முடித்தபோதே உங்களுக்கு எழுத உட்கார்ந்து, பாராட்டு என்பது சடங்காக முடிந்துவிடக்கூடாது, வாசிப்பு அனுபங்களை பகிர்ந்துகொள்வதே சரியாதாக இருக்குமெனத் தள்ளிவைத்தேன். மீண்டும் இரண்டாவது முறையாக வாசித்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படியொரு நூலை எழுதியமைக்கும் அதை எனக்குப் பரிசாக அளித்தமைக்கும் மிக்க நன்றி. இல்லையெனில் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்காது. தமிழ் நாட்டில் நல்ல நூல்களை சந்தைப்படுத்துபவர்கள் மிகவும் குறைவென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக மீண்டும் நன்றிகள்.
தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசிக்க முடிந்தது. ஒரு சில கட்டுரைகளை கூடுதல் ஆர்வத்துடன் வாசித்தேன்.
பிரெஞ்சு மொழியோடு தமிழருக்கான உறவுகள் என்ற கட்டுரை நான் விருப்பிவாசிக்க என்ன காரணமென விளக்கவேண்டியதில்லை. ஞானு தியாகு, தாவீது அன்னுசாமி போன்றவர்களின் உழைப்பை அறிவோம். அவர்கள் மாத்திரமல்ல புதுச்சேரியில் அண்மையில் மறைந்த திருமுருகனார் உழைப்பைக்கும் உரிய மரியாதையை புதுவை மக்கள் அளிக்கவில்லை, இப்படி அங்கே இன்னமும் நிறையபேர் இருக்கிறார்கள். அதுபோலவே தேசிகப் பிள்ளையின் உழைப்பு. மிகப்பெரிய தமிழரிஞரை உரியவகையில் அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு, உங்கள் கட்டுரை எனக்கு ஆறுதலாக இருந்தது.
நாராணகுருவை பற்றிய கட்டுரையும் பல புதிய தகவல்களை எனக்களித்தது; அவர் தமிழ் நாட்டில் தேசாந்திரியாகத் திரிந்தார் என்பதை அறிந்தவன்; ஆனால் அவரிடமுள்ள தமிழ் மொழி அறிவும் ஆற்றலுடன் தமிழில் கவிதைகள் எழுதகூடியவரென்பதும், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் குறித்து அவர் எழுதிய தேவாரப் பதிகங்கள் எனற நூலைப் பற்றிய தகவல்களும் எனக்குப் புதியவை. சைவ சித்தாந்தத்தின் கோட்டை என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையிலும் பொருள்பொதிந்த தகவல்கள் ஏராளமாக இருந்தன. அப்போதே ஜார்ஜ் பூரே என்ற பிரெஞ்சுக்காரர் நம்மவர்கள் தாய்மொழியில் பற்றற்றவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டி வருந்தியதாக நீங்கள் தெரிவித்திருந்த செய்தி யோசிக்க வைத்தது.
செஞ்சியின் பெருமை, தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் என்னை மிகவும் ஈர்த்ததென்று சொல்லவேண்டும், மிக நுணுக்கமான அரிதான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. செஞ்சியையும் தேசிங்கு ராஜனையும் மையமாக வைத்து ஒரு புனைவினை எழுதுவதென முடிவெடுத்திருக்கிறேன். அம்முடிவு உங்கள் கட்டுரை அளித்துள்ள தூண்டுதல்.
சிற்பங்கள் குறியீடுகள் குறித்த பத்தி, புதுச்சேரி வாழ் பிரெஞ்சு குடிமகன்கள் அவர்களுக்கான பிரநிதித்துவ தேர்தல் பற்றிய செய்திகள் தாங்கிய பத்தி, நாகர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வரலாற்று இணக்கம் குறித்த பத்தி என சிறப்பித்து சொல்ல நிறைய இருக்கின்றன.
பநேரங்களில் தமிழினம் இன உணர்வு மழுங்கிவிட்டதே என நினைப்பதுண்டு, இத்தொகுப்பில் மறைந்த புதுச்சேரி திராவிடக் கழகத் தலைவரின் திருமகன் தமிழ்மணியுடைய மொழியுணர்வை பாராட்டி இருப்பீர்கள். தொகுப்பை வாசித்தபோது கடைசிவரை உங்களுடைய இன உணர்வின் மூச்சினை உணரமுடிந்தது. உங்களைப்போல ஒன்றிரண்டுபேர் இருந்தால்கூட போதும் தமிழும் தமிழனும் கடைத்தேறுவார்கள்.
அன்புடன்
நாகரத்தினம் கிருஷ்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக