சிற்பியர் செதுக்கிய சிலைகளின் எழிலை
கற்பனை வளத்தை காண்பவர் வியந்து
அற்புதப் படைப்பென அகமிக மகிழ்தலும்
பொற்புடை கலைகளை போற்றலும் நன்றே!
கற்சிலை கடவுளாய் காட்டலும் ஆயிரம்
கற்பனை சூட்டலும் கைதொழச் செய்தலும்
முற்றிலும் மடமை; முனைந்திதை ஒழிக்க
சற்றே விழியே லோரெம் பாவாய்"
வீணாம் மதங்கள் விண்டவை கொண்டு
காணும் உலகினில் கயவர் செயலால்
பேணும் உரிமைகள் பெண்கள் இழந்து
பூணும் தாழ்நிலை போக்க எழுந்து
ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமமென
நாணம் தவிர்த்து நங்கையர் சொன்னால்
மாணுற முடியும் மடமைகள் தொலையும்
வீணே துயிலா(து) விழித்திடெம் பாவாய்"
பொய்யுரை எல்லாம் புராணங் களாகும்;
செய்வினைத் தூய்மை சீர்மை ஒழுக்கம்
எய்திட இடமிலை சிறிதும் மதங்களில்!
மெய்யினை வளர்க்க மேனி கொழுக்க
பொய்யினை எழுதிப் போனார் அன்று;
தைமுதல் தொடங்கும் தமிழர் ஆண்டே
தையலர் கொள்ளத் தக்கநல் லாண்டாம்;
பைய விழியே லோரெம் பாவாய்"
தள்ளுக நாரதர் திருமால் பெற்ற
பிள்ளைகள் அறுபதின் பெயரால் வழங்கிடும்
ஆண்டுக் கணக்கை ஒழித்து! அழித்து!
Õள்ளுவர் ஆண்டை வழக்கில் கொணர்ந்து
உள்ளுவ தெல்லாம் உயர்வெனச் சாற்றி
கொள்ளத் தகுநெறி கொண்டு குப்பையில்
தள்ளத் தகுவன தள்ளிட எழுந்து
உள்ளக் கருத்தை உரையெம் பாவாய்!"
சோதிடம் பார்த்து சுயவுணர் விழந்து
வேதியன் ஓதிடும் வெற்றொலி மந்திரம்
காதினை துளைக்க கடிமணம் புரிவது
தீதென உணர்ந்து தௌ¤ந்திடு பெண்ணே!
சூதெலாம் ஒழித்து சுயமாய் நினைத்து
காதல் கணவனை கைப்பிடித் தொழுகிடு!
மாதர் காதலால் மாள்க சாதியென
வாதிட எழுந்து வருகவெம் பாவாய்"
பெரியார் பாதையில் பெண்குலம் நடந்து
உரிமைகள் பெற்று உயர்வெலாம் உற்று
அரிவையர் குலமினி ஆணுக்கு உலகில்
சரிநிகர் சமமென சாற்றிட வேண்டும்
பெரியதோர் எழுச்சி பெண்ணினம் பெற்று
அரிதாம் செயல்கள் ஆற்றிடும் நிலைவர
உரிய நேரத்(து) உறக்கம் வருமோ-?
கரிய விழிமலர்ந்து கனன்றிடெம் பாவாய்!"
பஞ்சாங்கம் பார்த்து பாழ்பட வேண்டாம்
எஞ்ஞான்றும் பகுத்தறி விழந்திட வேண்டாம்
நஞ்சனைய மதங்கள் நவிலும் பொய்களை
கொஞ்சமுமே நம்பி குழம்பிட வேண்டாம்
அஞ்சாமல் சாதியின் ஆணிவேர் அறுத்து
அஞ்ஞானம் தொலைத்து அறிவொளி பெற்று
விஞ்ஞானக் கல்வியால் வெற்றினை குவிக்க
அஞ்சன விழிதிற வேலெம் பாவாய்!"
விடுதலை 5.1.1977
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக