ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு புகட்டிய ஆசான்! எவரும் எப்போதும் அவரிடம இரவல் கேட்காமலே எல்லார்க்கும் எல்லாமும் அளித்த அறிவுப் புதையல் அண்ணா!
சிலையாக வழிபட அல்ல அவர் நம்மை சிந்திக்க வைத்தது! அம்பேத்கர் பிறந்த மண் அவரின் நூல்களை மலிவுப் பதிப்பாக்கி பன் மொழிகளில் பெயர்த்து கருத்துப் பரப்புதலே கடமையெனச் செயல்படுகிறது. இங்கோ அண்ணா நினைவிடத்தில் எரிவாயுவை வீணாக்கி ஒளிவிளக்கு ஏற்றி கோயிலாக்கிக் குதுகலிக்கிறார்கள். சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்குகள் நடக்கின்றன. அவரின் படைப்புகள் அரசு முயற்சியாக அகில உலகமும் சென்றடைய திட்டமில்லை. மூலக்கதையை மறைத்து தழுவல் இலக்கியங்களை மக்கள் உள்ளங்களில் தவழ விடும் முயற்சி வெற்றி பெறாது, இயல்பான ஆற்றல் இருந்தும் முன்னோடிகள் முகவரிகளை மறைக்கும் மனப்பாங்கு வேதனையளிக்கிறது. தொல்காப்பியத்தை தொலைத்து விட்டு பூங்காவில் நறுமணம் நாடுக என்றால் மனம்ஒப்புமா? வள்ளுவத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு ஓவியம் கண்டு உவந்திடுக என்றால் உள்ளம் ஏற்குமா? இளங்கோவடிகளை மறந்து விட்டு அடியார்க்கு நல்லாரை மட்டுமே அகிலம் போற்றுமா? தன் நூல்கள் தரணியில் பரவ எவருக்கும் ஆசை எழுவது இயல்பு! அதற்காக முன்னூல்கள் மறக்கப்பட வேண்டுமா? வேரின்றி செடி ஏது?விதையின்றி மரமேது? அண்ணாவின்றி நாமேது? தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டிய அண்ணாவுக்கு தமிழ்நாட்டரசு காட்டப் போகும் நன்றிக்கடன் அவரின் எழுத்தையும் பேச்சையும் கருத்தையும் எங்கும் பரப்புதலே ஆகும்! நூற்றாண்டிலாவது ஆடம்பரங்களால் அண்ணாவுக்கு சிறுமை சேர்ப்பதைக் காட்டிலும் அவர் நூல்கள் படித்து தம்பிக்கு மடல்கள் படித்து விழிப்புற்றெழுந்த நாம், நம் பின்னவர்க்கும் அறிவியக்க வாயிலை திறந்து வைப்போமாக! அறிவு கொளுத்து வோமாக! மாநிலங்களவையில் அண்ணா முன்மொழிந்த புத்தாக்கச் சிந்தனைகளை நினைவு கூறுவோமாக!
தேசிய இனங்கள் விடுதலையை மையக் கருத்தாக்கமாக வைத்தே மாநிலங்களவையில் 1962 ஏப்ரல் திங்களில் அண்ணா தன் கன்னிப்பேச்சை நிகழ்த்தினார். இந்திய விடுதலைக்கு முன் கபூர்தலா காங்கிரஸ் மாநாட்டில் நேரு நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்து இந்திய ஒன்றியத்துக்குள் எல்லா மாநிலங்களையும் இணைத்து ஒன்றாக வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் எந்தப் பகுதியாவது பிரிந்து செல்ல விரும்பினால் காங்கிரஸ் இசைவளிக்கும் என நேரு பேசி இருந்தார். அதை நினைவு கூர்ந்து அந்த பழைய நெருப்பு இன்னும் நேரு பெருமகனாரிடம் கனன்று கொண்டிருக்கும் என தான் நம்புவதாகச் சொன்ன அறிஞர் அண்ணா ஏன் தென்னகத்துக்குச் சுயநிர்ணய உரிமையை தரக்கூடாது? எனத் வினா எழுப்பினார். இன்றளவும் காசுமீரச் சிக்கல் போர்களுக்கும் பல்லாயிரம் உயிரிழப்புக்கும் காரணமாக விளங்குகிறது. சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டதால் தான் தமிழ் ஈழமும் துன்பக் கடலில் தத்தளித்து நிற்கிறது.
நாடுகள் பலவற்றுடன் நட்புறவு என்பது நடைமுறையில் அந்த நாடுகளில் நம்மவர் படும் அவதிகள் தீர வழிகாண்பதில்லை என்பது அறிஞர் அண்ணாவின் வருத்தமாகும். 1966 ல் அண்ணா மாநிலங்களவையில் பேசிய சமயத்தில் அங்கேரி நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். தெருவில் இரு இளைஞர்கள் கிணடவாகப் பேசுவதாக அண்ணா சொன்னார். பசி (Hungry)நாட்டுப் பிரதமரை பார்க்க அங்கேரி (hungary) நாட்டுப் பிரதமர் வந்துள்ளதாக கிண்டல் செய்தாராம். இதைச் சொன்ன அண்ணா நட்புறவுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். பயன் ஏதேனும் இருந்திருப்பின் தென்னகத் திலிருந்து பர்மா சென்றவர்கள் ஏதிலிகளாய் எல்லாவற்றையும் இழந்து இந்தியா திரும்பிய சிக்கலுக்கு விடிவு காணப்பட்டிருக்கும். ஆனால் பலமுறை பர்மா போகிறார்கள்- வருகிறார்கள்- சுமுகத்தீர்வு ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். பயனில்லை. நட்புறவு என்பது இருநாட்டுத் தலைவர்களும் ஒருவர் நாட்டுக்கு அடுத்தவர் விருந்தினராகப் போய் திரும்புவதன்று. இரு நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத நட்புறவால் எள்ளளவும் பயனில்லை என்றார் அண்ணா. அடுத்து அண்ணா 1966 லேயே நாடாளுமன்றத்திலேயே கூறிய அறிவுரைகள் அவரின் தொலை நோக்குப் பார்வைக்குச் சான்றாகத் திகழ்கின்றது. பணக்கார நாடுகளுடன் பந்தபாசம் காட்ட போட்டா போட்டி போடும் தலைவர்களுக்கு மத்தியில் ஆப்ரிக்க நாடுகளுடன் இந்தியா தோழமை பூண்டிட வேண்டும் என்ற அண்ணா மாறுபட்டவர். ஏழைகளையே எண்ணி அரசியல் வியூகம் வகுப்பவர் என்பது வெள்ளிடை மலையென விளங்குகிறது. இன்று 12.4% இந்தியாவின் பணவீக்கம் எனில் ஆப்ரிக்க நாடான ஜிம்பாபாவேயின் பணவீக்கம் 1,500,000% விழுக்காடாகும். ஒரு தேநீர் பருக பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை! ஏழை நாடுகளை உயர்த்திட இந்தியா தன் பங்களிப்பை ஆற்ற அறிஞர் அண்ணா அன்றே அறிவுரை சொன்னார். அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீச அல்ல அண்ணா சொன்ன அறிவுரை!
பிரிட்டன் தன் காலனி நாடுகளை ஒரு அமைப்புக்குள் அடக்கி வைத்திருக்க உருவாக்கியது காமன் வெல்த் அமைப்பு! தென் கிழக்காசிய நாடுகள் காமன் வெல்த் உருவாக்க இந்தியா முனைப்பு காட்ட வேண்டுமென அண்ணா பேசினார். ஐரோப்பிய யூனியன் உருவாகும் முன்பே தென் கிழக்காசிய நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டுக்காக ஓரமைப்பிற்குள் திரள வேண்டும் என்றார் அண்ணா. சப்பானிய கூட்டையும் சப்பானிய தொழில் முனைவோர் பங்களிப்பையும் பெற்று இந்தியா ஏற்றமுற வேண்டுமென அறிஞர் அண்ணா எடுத்தியம்பினார்.
அண்ணாவின் பார்வை உலகநோக்குடையது,
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேருரையில் அண்ணா தன் உலக நோக்கை அழகுறப் படம் பிறப்பார்.
“கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத – கஞ்சநெஞ்சனின்இதயமில்லாக் கடும்பார்வை விழாத – தேவைகள், குற்றங்கள், பொய்மையே இல்லாத – பழிப்புரையே கேளாத உலகம் – உடலாலும் உள்ளத்தாலும் பிணிவயப்படாத மனித இனம் – எங்கே வாழ்நாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ -எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ – அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கி குடிசையில் – வாழும் மனிதனை இட்டுச் செல்லும் இலட்சியமே அண்ணாயிசம்”
அண்ணாவின் கொள்கைளை மறந்துவிட்டு ஆளுயர வெட்டுருக்களில் அஞ்சல் தலை அளவு அண்ணா படம் போட்டு நூற்றாண்டு எடுக்கிறார்கள். இருளைக் கிழித்து எழுஞாயிறாக கூழைகளுக்காக எளிமையான அரசியல் நடத்திய அண்ணாவின் புகழ் உலகில் ஓங்கும்! உண்மைக்கு அழிவில்லை!
நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக