சனி, 3 ஏப்ரல், 2010
தமிழே
தமிழே நீ வாழியவே
நந்திவர்மன்
தென்னவர் குலமுதலே இருள்நீக்கும் திருவிளக்கே!
மென்மலர் நறுமணமே வான்மின்னும் வெண்ணிலவே!
மன்னவர் புகழ்முடியே அவர்கையில் தவழ்நிதியே!
என்னுள மாள்அரசி நின்இணையடி வாழியவே!
மங்கல மணிவிளக்கே குலமங்கையின் குழல்மலரே
பொங்கும் புதுப்புனலே வயல்நனைக்கும் பெருமழையே
எங்கும் படரொளியே வைகறையின் இளவெயிலே
சங்கத் தமர்தமிழே நின்மலரடி வாழியவே
ஒலியென விரைபுகழே நின்பெருமை உலகறியுமே
புலியென எழுநடையே உன்புலவர் கவிநடையே
நலிவிலா மொழிவளமே கவிநாவில் வளரமுதே
பொலிவெலாம் புனையுருவே நின்பொன்னடி வாழ்கவே
வான்போய் வருங்கலமே புவிவலம்வரும் விண்கலமே
மீன்போல் ஆழ்பொறியே கடல்மீதொளிர் நீள்படகே
கான்வீழ் அருவியே அதன்கனநடை மின்சாரமே
ஊண்தரும் உயிர்தரும் தமிழ்த்தாயே வாழியவே
பொறியியல் புதுமையே தௌ¤விளக்கும் அறிவொளியே
அறிவியல் அரும்படைப்பே அணுவாற்றல் நிகராற்றலே
நெறிநூல் ஒண்கருத்தே நிலைமாறிடா நீள்விசும்பே
செறிந்த புகழ்க்குவையே சீர்தமிழ் வாழியவே.
Pon-Ka-Ma-Ya, August, Sep-1993.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக