ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!


உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!

(கழகக்குரல் வார ஏட்டில் 03.10.1976ல் நந்திவர்மன் எழுதியது)


புதைச் சேற்றில் அகப்பட்ட மூங்கையெனத் தவித்த புகழார்ந்த தமிழ்க் குலத்தின் நிலை கண்டு கலுழ்ந்த அண்ணா,

கொள்கை - குறிக்கோள் இன்மையே

இன்றுள்ள நிலைமைக்குக் காரணம்

என்றார்.

கற்றுத் தேர்ந்த வித்தகர் பலரைக் காசினிக்கு அளித்த தமிழ் நிலத்தில் மட்டுமல்ல - உலகெங்குமே நிலவும் குழப்பத்திற்கும், அமைதியின்மைக்கும் கொள்கையின்மையே காரணமாக அமைந்துவிட்ட சூழலில் - சுழலில் நம் தலைமுறை சிக்கிக் கிடக்கிறது!

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள், "காரல் மார்க்சின் கம்யூனிசமா? மேலை நாட்டு முதலாளித்துவமா?' என்ற கேள்விக்கிடையே வளரத் தொடங்கின.

"தென் கிழக்காசிய அரசியலில், அரசியல் கட்சிகளும் - அவற்றின் தலைவர்களும் மக்களைச் சரிவர இயக்க முடியாமல் போனமைக்குக் கொள்கை அடிப்படை இன்மையே காரணம்" என அரசியல் வித்தகர்கள் கூறுகின்றனர்.

"தனி நபர் விருப்பு - வெறுப்புக்கேற்ப ஏற்படும் கட்சிகளின் ஆயுள், குறுகிய காலத்தினதே" என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள் கிடைக்கின்றன. அரசியல் வரலாற்றில்!

நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் கட்சி இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே நிலைமை தான், "கவர்ச்சிகரமான சொல்லடுக்குகள், வலுவான அரசியல் பொருளியற் கொள்கைகளாக ஆகிவிடா என்பதற்கு அங்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் அகப்படுகின்றன.

அண்ணாவே சொல்லி இருக்கின்றார்- "கொக்கோ உற்பத்தியைப் பெருக்குவோம்" என்று முழங்கிய நிக்ரூமா, அதற்கு ஏற்ற சந்தைகளை உருவாக்கத் தவறியது பற்றியும், அதனால் உற்பத்தி பெருகியும் 'கானா' நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைத்தது பற்றியும்.

கொள்கை இல்லாமல் சீர்குலையும் நாடுகள், கிழக்கு அல்லது மேற்கு என்ற இரு வல்லரசு முகாம்களில் விழுகின்றன -- வீழ்ச்சியுறுகின்றன. 'இரவல்' பொருளாதார அரசியல் கொள்கைகளில் சிக்குகின்றன.

கருத்துக்கள் பிறப்பதற்குக் கருத்தடை ஏதுமில்லை.

கருவானவை உருவாவதும் உண்டு -- கருவிலேயே கருகிப் போவதும் உண்டு.

கருத்துக்களும் அவ்வாறே காலங் கடந்தும் காசினியில் நிலைப்பதும் உண்டு -- கண்முன்பே காற்றாகிப் போவதும் உண்டு.

காலம் உள்ளளவும் ஞாலம் உள்ளளவும், ஒரே கருத்தே ஏற்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. காலச் சுழற்சிக்கேற்பக் கருத்து வளர்ச்சியும்-மலர்ச்சியும் ஏற்கப்பட்டாகல் வேண்டும். இது, "தீது" என்றோ, "புதுக் கருத்து" உதயமாவது பேதைமை என்றோ அறிவுடையார் கூறார்.

அறிவு, தேங்கிய குட்டை நீரன்று -- தெளிந்த ஆற்று நீரோட்டம், ஊற்று நீரின் புதுப்புனலோட்டம்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததன் பயனாய் அகிலம் அறிந்த அரசியல் நெறிகள் -- இரஷ்யப் புரட்சி உருவானதன் காரணமாக உலகம் உணர்ந்த உயரிய கருத்துக்கள் -- இவைகளோடு மனிதகுலம் பூண்டற்றுப் போக வேண்டுமா?

இன்னொரு புரட்சியோ -- புதுக் கருத்தோ -- பழைமைக்கு எதிரான அறிவின் பகுத்தறிவு ஒளியோ பிறக்காது என்று எவர்தான் பேசிட முடியும்?

"கொள்கை" அடிப்படையை "இரவல் சரக்கு" களாலே அமைக்க விரும்பாமல் கானா நாட்டு நிக்ரூமா, பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, புதியதொரு விஞ்ஞான சோஷலிசத்தை -- பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டில்லாமல், ஒழுக்க முதல் வாதத்தை அளவுகோலாக்கிச் சமூகப் பாகுபாடுகள் செய்யப் போவதாக -- உருவாக்கப் போவதாக உலகினுக்கு அறிவித்தார்.

கனவு கனவாகவே முடிந்திருக்கலாம், ஆனால், அந்த உந்துதலின் பின்னுள்ள உணர்வு, 'கொள்கை அடிப்படையை' வலுவாக்க வேண்டும் என்பதேயல்லாமல், 'கொள்கையே தேவையில்லை' எனக் கோமாளி அரசியல் நடத்தும் இங்குள்ள சிலரைப் போன்றதல்ல.

இந்த நிலைமைகள் எல்லாம் இல்லாமல், இன்பத் தமிழகத்திற்கு ஏற்றமளிக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளை அதன் அடிப்படையில் அமைந்த அரசியலை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கி விட்டார்.

அண்ணா உலகத் தலவைராக வேண்டியவர் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால்.

அத்தகு உயரிய இலக்கினை -- அண்ணா மலைப் பல்கலைப் கழகப் பேருரையில் பேரறிஞர் அண்ணா எத்துணை அழகுறத் தெரிவிக்கின்றார் தெரியுமா?

கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத கஞ்ச நெஞ்சனின் இதயமில்லாக் கடும் பார்வை விழாத தேவைகளே இல்லாத குற்றங்களே இல்லாத பொய்மையே இல்லாத பழிப்புரையே கேளாத உலகம்.

உடலாலும், உள்ளத்தாலும் பிணி வயப்படாத இனம் எங்கே வாணாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கிக் குடிசையிலே வாழுகின்ற மனிதனை இட்டுச் செல்லத் துடித்தாரே அண்ணா.

குவலயமே கொள்ளத்தக்க கொள்கை குறிக்கோள் அல்லவா இது.

இத்தகு கொள்கையை ஏந்திய தி.மு. கழகம், அத்தகு வலிவும் பொலிவும் வையத்திற்கே தேவைப்படும் தத்துவமும் கொண்டது என்பதனை அரசியல் வரலாற்றாசிரியர்கள் எழுதும் நாள் தொலைவில் இல்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக