ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும்!
(நம்நாடு வார ஏட்டில் 05.02.1978 ல் நந்திவர்மன் எழுதியது)
நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும் பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான், வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமை துலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்குமனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகின்றான். பொற்புடைத் தமிழினப் பூங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு, அழுக்கு மனத்தினரால் நேரிடுகின்றது. போரிடும் பரம்பரைப் புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலைமை நீடிக்கின்றது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல் பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப் போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக் கூறு அமைத்து ஓடிப் பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவே மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக் கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவவதிலலை. ஆனால் கத்துக்கடல் தாண்டி நாடுபல வென்ற தமிழர் உள்ளமோ கேடடொன்று தமிழினத்திற்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமை வீழ்த்தும் கொடுவாளாய்க் கூனற்பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லை. நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை.
மாற்றாரோடு பேரம் நடாத்தவும் மாற்றினத்தானிடம் சோரம் போகவும் தான் தமிழர்கள் இன்று தயாராக உள்ளனர்.
பொங்கு தமிழர்க்கொரு இன்னல் என்றால் வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் வெற்றித்தோளை உயர்த்தும் எண்ணம் வருவதில்லை. ‘சிங்களவன் செந்தாலும் சிந்துவேன் கண்ணீர்‘ செந்தமிழன் இறந்தாலும் சிந்துவேன் கண்ணீர் என்றிடும் வந்தேறு குடிகளேமனோகர மைனர்களாய் இம் மண்ணில் களைகளாய் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். ‘சிங்களத்திலும் என் சினிமா பார்க்கும் சுவைஞர்கள் உண்டு. எனவே செந்தமிழர் இனப்பெண்டிர் கற்பிழந்து பொற்பிழ்ந்து கசக்கி எறியப்பட்டாலும் கதறிடேன்-மனம் பதறிடேன் என்றிடும் வீடணரே இங்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஈடில்லாக் கற்பினுக்கு இலக்கணமாம் எந்தமிழ்க் குல மகளிரை நாடோடி மன்னன் ஒருவன்-தாசிகுலம் என்று பேசிய பின்பும் ஆட்சிபீடமேறும் காட்சியை பாழ்நிலமாம் பைந்தமிழகத்தில்தான் காணமுடியும். கணவனைத் தவிர கடவுளைக்கூடத் தொழேன் என்ற கண்ணகி வாழ்ந்த கன்னித் தமிழ் நாட்டில் கணவன் பேச்சையும் மீறி என் கண்ணசைவின் கட்டளையே ஏற்பர் என ஒரு மனிதர் கழறவும்- கழறிய மனிதர் ஏமாளித் தமிழரை ஏய்க்கும் கோமாளியாக அரசுக் கட்டிலேறவும் இங்குதான் முடிகின்றது.
இந்த நிலையிலும் தமிழரின் சொந்த மண்ணாம் தமிழகத்தில் வெந்த உள்ளத்தோடு வேற்று நாடுகளில் உதைபடுவோருக்காக- வதைபடுவோருக்காக ஆறுதல் கூற, தேறுதல் கூற - போர்க்குரல் எழுப்பிப் புவியாண்ட மரபின் வீரம் பட்டுப் போகவில்லை எனப் பாருக்கெல்லாம் பறைசாற்றிட ஒரே ஒரு அரசியல் இயக்கம் மட்டுமே உண்டு என்பதனை உலகத் தமிழர்கள் ஒப்பிவிட்டனர்-உள்ளத்தில் பதித்துக் கொண்டனர்.
அண்ணா வாழ்ந்த போதும்- அவர் நெஞ்சில் மட்டுமே வாழும் நிலை பெற்றபோதும் தி.மு. கழகம் மட்டுமே உலகத் தமிழரின் உரிமைப் போர்ப்படையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. உள்நாட்டுச்சிக்கல் இதுவென்று கூறித்தலையிடாமைக்குக் கரணியம் கூறி வருவோர் பலருண்டு. வியட்நாமில் குழப்பம் என்றால் வீட்டுச் சுவர்களிலே வாசகங்களைத் தீட்டும் கம்யூனிஸ்டுக்கள் இலங்கைத் தமிழர் கலங்கித் தவிக்கின்றார் என்றல் கேளாக்காதினராக வாளா இருந்துள்ளனர். அரபு நாட்டவர்க்கு அல்லல் என்றல் ஆதரவுக் கரம் நீட்ட இங்கே ஆளுண்டு! அன்னைத் தமிழ் நிலத்தில்-தன் இனத்தவனுக்கு தரணியில் எங்கேனும் தீங்கென்றால் - தாங்கித்தானாக வேண்டும் தமிழன்! இது உள்நாட்டுச்சிக்கல் எனக் கையை உதறிவோரே இருக்கின்றனர். அண்மையில் உலகத்ó தமிழப் பண்பாட்டு இயக்கத்தவர்க்கு விருந்தளித்த நடிகர் இராமச்சந்திரன் இலங்கைச் சிக்கல் உள்நாட்டுச் சிக்கல்-என்னால் ஏதுஞ் செய்ய இயலாது என்று கையை விரித்த காட்சியை உலகத்தமிழப் பிரதிநிதிகள் கண்டனர்! கண்டதன் பயனாய் இராமச்சந்திரனை இனங்கண்டு கொண்டனர். இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்கனை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
"தமிழகத்திலிருந்து சென்ற தமிழினத்தாரைச் சிங்களவர் அழித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் வஞ்சகமாக ஈடுபடும்போது அதை உள்நாட்டுச் சம்பவம் என்று விட்டுவிட முடியுமா? கணவனும் மனைவியும் வீட்டுக்குள் அமைதியாக வாழ்வு கடத்துகிறபோது - கொஞ்சிக் குலாவுகிறபோது அங்கு பக்கத்து வீட்டுக்காரனுக்கு வேலை இல்லை. ஆனல், மனைவியின் கழுத்தை அறுக்கக் கணவன் கொடுவாள் தூக்கிவிட்போது - அதைக் கண்ட மனைவி ஐயோ! ஐயோ! என்னைக் காப்பபற்ற யாருமில்லையா? என்று அலறுகிறபோது அது வீட்டு விஷயமாகாது; பக்கத்து வீட்டுக்காரன் பாய்ந்துதான் தீரவேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திச் சென்றுள்ளார்.
அணுக்கத் தொண்டர்களாய் அண்ணனோடு இருந்தவர்க்குத்தான் நுணுக்கமாக அண்ணா சொன்னதன். உட்பொருள் புரியுமே தவிர, எப்போதாவது முகத்தைக் காட்டிவிட்டுப் போகும் இராமச்சந்திரர்களுக்குப் புரிய முடியாது. அண்ணன் வழி நடப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்க்குத்தான் அண்ணன் மொழி புரியுமே தவிர-ஊரை ஏமாற்ற உறவு வேடம் போடும் பொய்யின் மைந்தர்க்குப் புரியவே புரியாது. அண்ணன் சொன்னதையே அறியாத நடிகருக்கா அருந்தமிழர் வரலாறு புரியப் போகிறது? சிங்களவரின் முதல் மகனை விஜயன் எழு நூறு வீரர்களோடு ஈழத்திரு நாட்டில் கி.மு. ஐந்து, ஆறு நூற்றண்டுகளில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், நாகர்கள் என்றும் கூறப்பட்ட குடிகள் அங்கு குடி இருந்தனர் என்று சிலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ், பரணவிட்டண்ணா "ஆரியக் குடியேற்றங்கள்; சிங்களவர் " என்ற ஆங்கில நூலில் எழுதுகின்றார்.
"சிறீலங்கா அரசியல் 1947-73வரை " என்ற நூல் எழுதிய பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் என்பார் முதல் முதல் ஈழத்தில் குடியேறியோர் திராவிட இனத்தவரே என்று பலரும் கருதுவதாக எதியுள்ளார்.
வரலாற்றுக் காலத்திற்கு முன் பிருந்தே ஈழத்தில் திராவிடஇனத்தவரின்குடியேற்றம் நிகழ்ந்துழூ வந்தாக ‘பாஷ்யம் எனும் அறிஞர் கருதுகிறார்.
ஈழநாட்டு வரலாற்றசிரியர்களுன் முதன்மையாக இப்பகுதில் வைத்துக் குறிப்பிட்டுகவரான ஜி. மெள்னி என்பார். விஜயன் வருவதற்கு முன்பாக வட்டர்கள் என பழங்குடிகளே ஈழத்திபரந்து வாழ்த்தனர். இவர்கள் கடற்கோளால் தாயகத்தில் இருந்து இலங்கைத் தீகளாக பிரிக்கப்படுவதற்கு முன்பாகத் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைத் தீவு வந்தனர்கள் என்று திட்டவட்டமாக எழுதியுள்ளார்.
உலகின் முதல் தாய்மொழி தமிழ் என்ற பேருண்மை இன்னமும் அறிவாளர்க்கு சரியாக புலனனாமல் இருந்து வருகிறது. மொழி ஞாயிறு தவநேயப்பாவாணர் உலகம் முதல் உயர்தனிச் செம்மொழி என்ற தம் ஆங்கில நூலில் ஆணித்தரமாக நிறுவிய உண்மையை உலகம் ஒப்பும் நாள் தொலைவில் இல்லை. உலகின் முதல் மொழியைப் பேசிய முதற் குடிமகனான தமிழின ஈழத்தில் முதன்முதல் குடியேறியவன் என்பதற்குச் சான்னுதேடி அலையத் தேவை இல்லை என்றாலும் சிங்களவரும் மேனாட்டாரும் செப்பினால் தான் தமிழரில் சிலர் ஒப்புவர் என்பதால்தான் அவர்கள் மேற்கோளைத் தர நேர்ந்தது ஈழத் திருநாடு சிங்களவர்குடியேறிய பூமி! இன்பத் தமிழர்கள் வரலாற்றுக்கு முன்பே வாழ்ந்த நிலம்! சென்ற நாடு - தமிழரசர் வென்றவர் நாடுகளை-தமிழரே ஆளும் நிலை ஏற்பட்டிருந்தால் உலகத்தில் தமிழினத்தின் ஒங்குபுகமுக்கு ஒரு குறையும் நேர்ந்திருக்காது.
அன்றிருந்த மன்னர்கள் ஆதிக்க எண்ணமின்றி அடுபகைத்துடுக்கடக்கி அன்னை நிலம் மீண்டிட்டடார். நேடியோனை என்னும் பாண்டியன புறநாறூற்றில் "மூந்நீர்விழவின் நெடியோன் " என்று கூறப்படுகின்றான். கீழ்த்திசைநாடுகளை வென்று மீண்ட பின்னர் கடலிற்கு நன்றிகூறும் முகத்தான் இந்தப் பாண்டியன் விழா வெடுத்தானாம் விழா எடுத்து வீணாய்ப் போனவர்கள் தமிழர்கள். வெளி நாடுகளில் தமிழினத்தின் ஆட்சியை வேரூன்றி இருந்தாலும் இன்று அலையெல்லாம் தமிழ்பாடும் - அயல் நாடுகள் தமிழ் பேசும் - அவனியிலே தமிழொன்றே அரச மொழி என்றிருக்கும் நிலை மலர்ந்திக்கும்.. குலையெல்லாம் நடுங்கி இங்கே குள்ளநரிகள் ஒடி நிற்கும். குவலயமே தமிழ் கூறும். மலையெல்லாம் மண்ணெல்லாம்-மன்னு நதி கடல் எல்லாம் மாத்தமிழர் புகழொழிக்கும் மர்ப்புகழை இழந்து விட்டோம்.
கீழ்த்திசை நாடொன்ரை வென்று அதற்கு மையமாக கடற்கரைப் பாதைஒன்றில் தன் அடிச்சுவடுகள் பொறித்து அவற்றைக் அலைகளை கழுவிடுமாறு செய் தான் வடிவலம்ப நின்ற பாண்டியன். இன்று தமிழன் கண்ணீரால் சிங்களவனின் கால்கழுவிச் கொண்டிருக்கிறான். இங்கோ மாற்றனுக்கு மண்டியிட்டுச் கொண்டிருக்கிறான்.
இமயத்தின் வெற்பினிலே கொடி நட்டான் சேரன் குட்டுவன் என்று பெருமைப் படுகின்றோம். கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றினான் என்று களிக்கின்றோம். ஆனால் செங்குட்டுவன் மாடலன் என்னும் பிராமணனுக்கு 50 துலாம் பொன் கொடுத்ததையும் கொடுங்கோளூரில் வேள்வி நிகழ்த்திய அடிமைத்தனத்தையும் எப்படிமறத்தற்கியலாதோ அவ்வாறே வென்ற நாட்டை ஆண்டிட வழி செய்யாத பழியும் பெரும் பழியே! இத்துகு மன்னர்தம் மெத்தனத்தால் தமிழினமே அடிமைப்பட்டுவிட்டது. வேற்று நாடுகளில் இருந்து தமிழர் விரட்டப் படவும் - தமிழர் நாட்டில் வேற்றினத்தார் அரசோச்சவுமான அவலநிலை ஏற்பட்டு விட்டது.
ஈழத்தின் முதல் குடிகள் என்று சொல்லப்படும் நாகர்கள் யாரென்பதற்கு மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் நல்ல விள்ககம் நல்கியுள்ளார்.
கீழ்த்திசை நாட்டார் நாக வணக்கமும் - நாகமுத்திரையும் கொண்டிருந்தனால் நாகர் எனப்பட்டார். அவர் நாடு நாகநாடு எனப்பட்டது. அவருள் நாகரிகமும் அநாகரிகமுமாக இருசார் மாந்தரும் இருந்தனர்.
வங்கக் கடல் தோன்று, முன்னர் அங்கிருந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மாந்தர், கீழைக்கரை நெடுகிலும் குடியேறியதனால் அவர் சேர்ந்த ஊர்கள் நாகர் கோயில், நாகூர், நாகப்பட்டினம், நாகபுரி எனப் பெயர் பெற்றனர்" என்று தேவநேயப் பாணவார் தெளிவுரைப்பார்.
பழந்தமிழ்க்குடிகளான நாகரின் நாட்டைத்தான் வந்தேறு குடிகளான சிங்களவர் கைப்பற்றினர். அப்படிக் கைப்பற்றிய காலத்தும் ஈழத்திருநாட்டின் முழு ஆதிக்கமும் சிங்களவர் கைக்குச் சென்றிட வில்லை. தமிழர்கள் சிங்களவருடைய ஆட்சியின் கீழó அடிமைப்படுத்தப்படவில்லை.
அக்பரின் காலடி படாத நாடாக-அசோகனின் ஆட்சிபரவாத நாடாக அன்னைத் தமிழ்நாடு இருந்ததுபோன்றே சிங்களவரின் ஆளுமையின் கீழ்சிறைப்படாத நாடாகவே தமிழ்ஈழம் óஇருந்து வந்துள்ளது.
16-ம் நூற்றண்டில் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளைப் போர்ச்சுகிசியர் கைப்பற்றினர்கள். அதன்பின் டச்சுக்காரர்கள் வந்திறங்கினர். அடுத்துவந்த ஆங்கிலேயர்கள் 18-வது நூற்றண்டின் தொடக்கத்தில்தான் இலங்கைத்தீவு முழுமையும் ஓரரசின் கீழ்-ஒரு குடையின் கீழ் கொணர்ந்தார்கள்.
எப்படி இந்தியத் துணைக்கண்டம் வெள்ளையர் வருகைக்குப் பின்னரே ஒரு நாடாக உருவாயிற்றோ அவ்வாறே இலங்கைத் தீவும் வெள்ளையரால் தான் ஓரரசிற்குட்பட்ட ஒரு நாடாயிற்று.
நரிக்கொரு புதர் உண்டு. புலிக்கொரு குகை உண்டு. பாம்புக்கும் புற்று உண்டு. குருவிக்குக் கூடு உண்டு. தமிழனுக்கொரு வீடு நாடு வேண்டாமா? என்ற அடிப்படைடியில் அல்ல இலங்கைத் தமிழர் தனிநாடு கோருவது.
இருந்த நாட்டை - இழந்த நாட்டை - உரிமையோடு கேட்கிறார்களே ஒழிய வேறல்ல; இதுவும் வேறு வழியே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பின்னர் தான் கேட்கிறர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநில சுயாட்சி மறுக்கப்பட்டு, தமிழினத்தை அழித்தொழிக்கும் திட்டமிட்ட இன வெறிப்போக்கு மேலோங்கிய பின்பே விடுதலைக் கோரிக்கை வெடித்தது. மொழியுரிமை மறுக்கப் பட்டு, இரண்டாந்தர குடிமக்களாகத் தமிழர்கள் முடக்கப் பட்ட பின்னரே விடுதலை எண்ணம் துளிர்ந்தது. தொடர்ந்து இனக்கலவரம்-தமிழர் உயிர் உடமை கற்பு பறிப்பு என்பன நிகழ்ந்து வருவதால்தன் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் என்ற அளவில் தமிழ் ஈழம் கோரி வருகிறார்கள்.
பேசித் தீர்த்திருக்க வேண்டிய பிரச்சினையை இவ்வளவு பெரிதாக முற்றவிட்டது சிங்களவரின் இனவெறியே! அறிவுடைமையோடு இனித் தொழிற்பட்டு இதனைத் தீர்ப்பதும் தீர்ககாததும்சிங்கள அரசின் கையில் இருக்கிறது. உலகாண்ட இனத்தை ஒடுக்கி அடக்கி சிங்களவன் வாழமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் தமிழன் குமுறி எழுந்திருக்க மாட்டான்.
அடுக்கடுக்காக அல்லல்களைச் சந்திக்கும் தமிழினம் இவ்வாண்டு சோதனைக்காளான நேரத்தில் "உலகத் தமிழர்களின் முதல்வர் " என ஈழக்கவிஞர் இளங்கோவால் பாராட்டப்பெற்ற தமிழினத் தலைவர் துடித்தெழுந்தார். கனக விசயர் முடித்தலை நெறித்த தமிழினத்ததார்க்கு இன்னலா என்று எழுச்சிக் குரல் கொடுத்ததார். தமிழகமாளும் துரோகிகள் கூடாது கூடாது இது உள்நாட்டுச் சிக்கல் தி.மு. கழகம் பேரணி நடத்தத் தேவையில்லை என ஊர் தோறும் கூக்குரல் எழுப்பினர்கள்.
வரலாற்றை மறந்துவிட்டவர்களே! 1961 மே 9-ம் தேதியன்று இலங்கை ஆட்சியின் மொழிக்கொள்கை குறித்தும், அதன் பயனாய்த் தமிழர் அடையும் அல்லல்கள் குறித்தும், சிங்கள வெறியர்கள் செந்தமிழர்க்கிழைத்த அட்டூழியத்தைக் கண்டித்தும் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் கட்டளையேற்றுப்பேரணி நடத்தியதை மறந்துவிட்ட மகாபாவிகளே! அண்ணாவின் பெயரால் அரசியல் அங்காடி நடத்தும் அற்பர்களே! கலைஞர் செய்வது அத்தனையையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற காழ்ப்பின் அடிப்படையில் கண்டித்த நடிகர் கட்சிக்காரர்களே! அண்ணா செய்ததை அண்ணாவின் உண்மைத் தம்பி கலைஞர் செய்தார்! நீங்கள் அலறினீர்கள். யாரென்றும் இனம் காட்டிக் கொண்டீர்கள்.
கறுப்புப் பணத்தால் மத்திய அரசின் சீற்றத்திற்கு ஆளாவோம் என்று மௌனம் சாதித்தீர்கள்! உங்கட்கு இன்னொன்றையும் நினைவூட்டுவேன். அப்போதைய இலங்கை அரசு தி.மு. கழகப் பேரணி குறித்துத் தனது எதிர்ப்பை மத்திய அரசிற்குத் தெரிவத்தபோது இந்தியப் பேரரசு என்ன பதில் சொல்லிற்று தேரியுமா?
"தி.மு. கழகம் காங்கிரசுக்கு எதிராக இயங்கும் ஒரு அரசியல் கட்சி " உண்மையில் அதன் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. ஒரு சுதந்திர நாட்டில் எழுத்து- பேச்சுரிமையும், எந்தத் தனி இயக்கத்தைத் தோற்றுவித்து நடாத்திவரும் உரிமையும் உள்ளதால் ஒருவர்தான் எண்ணியதை எடுத்துரைக்க முடியும்! தடுக்க முடியாது! என நேரு அரசு நவின்றதை நாடோடிகள் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போதுள்ள சனதா அரசும் சனநாயக - மனிதாபிமான உணர்வுகளை மதிக்ககூடியது. என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இருந்தும் ஏனோ வாளா இருந்தனர் தமிழினத் துரோகியர் தானாடாவிடினும் சதையாடும் என்ற மொழி இவர்கட்குப்ó பொருந்தாது. ஏனெனில் இவர்கள் இனத்துரோகிகள்!.
இத்தகு துரோகியரை உலகத் தமிழர்கள் என்றோ புரிந்து கொண்டுவிட்டார்கள். இலங்கைக் கவிஞர் இளங்கோ பாடினர் "அண்ணாவின் தம்பிகளே...... மண்ணா கேட்கிறோம்? மடி நிறைய பொன்னா கேட்கிறோம்? எமை எண்ணா திருக்காதீர் அதுவே போதும் " என்று பாடினர் அண்ணாவின் தம்பிகளாய் நடித்துக் கொண்டிருப்போரே.......உம்மை எண்ணித்தான் ஈழக்கவிஞர் இடித்துரைக்கிறரே தவிர, இலங்கைத் தமிழர்க்காகத் துடித்தெழுந்த தி.மு.கழகமாம் அண்ணாவின் உண்மைத் தம்பியர் பாசறையை அன்று.
ஈழத்தமிழர் இன்னல் போக்க இங்குள்ள கோழைத் தமிழர் வீரம் பெற்றுக் கோமாளிகளை நம்பி ஏமாளிகளாகும் மயக்கத் தினின்று விடுபட்டு உலகத் தமிழரே ஒன்று படுங்கள் என்று குரலெழுப்பும் காலம் வந்தாக வேண்டும். அத்தகு காலத்தைக் கலைஞரின் சுட்டுவிரல் காட்டும் பாதையில் தேடிப் போகும் தி.மு.கழகம் வென்றாகவேண்டும்! வரலாற்றில் நின்றாகவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக