ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!



அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!

(நம்நாடு வார ஏட்டில் 10.11.1977 ல் நந்திவர்மன் எழுதியது)

வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க தவறி விட்டாலும் அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் தி.மு. கழகத்திற்கு நற்சான்று நல்கத் தவறினாரிலர் கொள்கைச் சிறப்பால் குவலயத்தில் குன்றாப் புகழை குறைவில்லாமல் கொண்ட தி.மு.கழகத்தை - தென்னக அரசியல் கட்சிகள் பற்றிய எழுதிய James Watch... என்ற சுவீடன் நாட்டு ஸ்டாக்ஹோம் பல் கலைக்கழக அரசியல் விற்பன்னா "Faction & Front" என்ற நூலில் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில் காட்டிக் கொடுத்த நடிகர் கட்சியைப் பற்றி எழுதுகையில் One - Man Show என்று வர்ணித்துள்ளார். ஒரு மனிதனே இணையாக நடிக்கப் பெண்ணில்லாமல் துணைப் பாத்திரங்களேற்க நடிகர் இல்லாமல் - வில்லனாக ஒரு முளைத்து அவனை வீழ்த்தும் காட்சி இல்லாமல் படம் முழுவதும் ஒருவரே காட்சி தந்தால் யாரால் ஏற்பதற்கு இயலும்? ஒரு வரும் காண விரும்பாரன்றோ! திரைப்படத்திலேயே ஒரு மனிதன் மட்டும் தோன்றுவது சரியாகாது எனில் அரசியல் கட்சியில் One - Man Show மக்களால் வெறுக்கப்படுமே தவிர வரவேற்கப்பட மாட்டாது.
காணச் சகிக்காத காட்சி One - Man Show திரையில்! இப்படிக் நாணத்தக்கதாக முடிவை மேற்சொன்ன நூலாசிரியர் One - Man Show என்று சொல்வது நாணத்தக்க ஒன்று - அந்தக் கட்சியில் உள்ளோர்க்கு!.
பேணத் தக்கதல்ல இந்த ஒரு மனித ஆதிக்கம்! எதிர் காலத்தில் இது மிகவும் பாதிக்கும் என்ற உணர்வு மெல்ல நடிகர் கட்சியிலே கூட முளைவிட்டுக் கொண்டிருக்கிறது. நியமனப்பொதுக் குழு -நினைத்தால் மாறும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள்! தேர்தலே நடத்தாமல் கட்சிப் பொறுப்பில் தன்னைத் தானே திணித்துக் கொண்ட நடிகர்! அவர் விரும்பினல் ‘தலைவர்களை‘ இறக்குமதி செய்து கொள்ள அவரே அவர்க்களித்துக் கொண்ட உரிமம் இவை கேளிக்குரியவை என்று தெரிந்தும் - ‘பச்சை‘யாகப் புரிந்தும் பதவி மேலுள்ள ஆசையால் ஒட்டிக்கொண்டிருப்போர் உதடுகளால் போற்றித் திருஅகவல் பாடிக் கொண்டிருந்தாலும் மனம் பொருமி உள்ளத்தால் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்! One - Man Show சுவை குன்றினல் அவை- சட்டப் பேரவையும்- காலியாகலாம்!
குறுகிய நோக்கங்கட்காக கோப தாபங்கட்காக- கொள்கை ஏதும் அறிவிக்காமலே தொடங்கப் பெற்ற நடிகர் கட்சி எப்படி நல்லறிவாளர் பாராட்டைப் பெற முடியும்? கொள்கை அறிவித்த பின்பு நடிகர் தந்த குழப்ப உரைகளைக் கேட்டு அறிஞர்கள் குறுநகையல்ல குலுங்கக் குலுங்கச் சிரிக்காமல் எப்படி இருந்திட முடியும்?
‘அண்ணா இசம் என்ற சொல்லை நடிகருக்கு முன்பாகவே புதுவை அ.தி.மு.க. தன் கொள்கைப் பிரகடனத்தில் கையாண்டது. 1973 மர்ச் 22ம் தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்8-ஆம் பக்கம் 1-ஆம் பத்தியில் தெளிவாக வெளியான கொள்கை அறிவிப்பு தனைப்பொருள் புரியமால் திருடியநடிகர் செப்டம்பரில் தன் கொள்கையாக அதனைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்- பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்பது போல் நாட்டைக் கெடுக்க வந்த நடிகர் திருடிக்கொண்ட சொற்றொடராம் அண்ண இசத்திற்கு அளித்த சுய விளக்கம் அதனை கேலிக்குரியதாக்கி விட்டது ‘காரீயமும் வெள்ளீயமும் கலந்தது காந்தீயம்’ என்று கூட நடிகர் விளக்கம் நல்க முற்பட்டிருப்பார்! நல்லவேளை காந்தியம் தப்பிற்று. அண்ணா இசம் அகப்பட்டது. கம்யூனிசமும் கேப்ரி விசலிசமும் சோஷலிசமும் தனித்தனிப் பிழிந்து வடித்தொன்றய்க் கூட்டிய சாறே, அண்ண இசமேன நடிகர் உளறி வைத்தார்!
அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை முதலில் குறிப்பிட்ட அரசியல் அறிஞர் James Watch தமது நூலின் அழகுற வடித்துள்ளார்.
அண்ணா சமுதாயத்தை இரண்டாகப் பிரிக்காமல் மூன்றாகப் பிரிப்பதாக அந்த அறிஞர் கூறுகிறார். முத்தமிழ் வித்தகர் என்பதால் அண்ணா மூன்றாகப் பிரித்தாரிலர். முப்பால் கற்றவர் என்பதாலும் அன்று, வலது-இடது என்று மட்டும் அரசியல் இயக்கங்களைப்பகுப்பதில்லை. (Centrist) நடுவிலுள்ளோர் என்றும் பகுப்பதுண்டு. தி.மு. கழகம் ஒரு Centrist Party வலதுசாரி கட்சியோ - இடதுசாரியோ அல்ல. நடுவழி நடக்கும் நல்லதோர் இயக்கம். நடிகருடைய கட்சிபோல் கெடுவறழியில் நடக்கும் கீழோரின் கூடாரமன்று தி.மு. கழகம் எனவே அரசியலில் எப்படி நடுவழியோ அவ்வாறே பொருளாதாரத்திலும் இடைவழியே தி.மு. கழகம் ஏற்ற வழி. எனவே தான் பேரறிஞர் அண்ணா முதலாளி-தொழிலாளி என்ற பிரிவில் சமுதாயத்தை அடக்கமால் இடைப்பட்ட பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டார்.
மொழியில் இசையில் பண்பாட்டில் இரவல் கருத்துக்களை அண்ணா விரும்பாததைப் போன்றே பொருளியற்றுறையிலும் இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகள் கூடாது என்னும் கொள்கையை அண்ண கொண்டிருந்தார்.
மேற்கு-கிழக்கு என வல்லரசுகள் உலகை இருகூறாக்கிவைத்தற்கெதிராக நேரு போன்றோர் ‘நடுநிலை’ கூட்டுச் சேராமை போன்ற கோட்பாடுகளை உருவர்க்கினர். நட்பு பகை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளோரை "நொதுமலர்" என்பது தமிழ் மரபு-அதைப்போல் மேற்கு-கிழக்கு வல்லரசுகட்கான போட்டியில் யாருக்கும் நண்பனாகவோ பகைவனாகவோ இல்லாமல் "நொதுமலர்" போல் இந்நாடு நடக்கலாயிற்றன்றோ!
அதுபோன்றே காப்பிடலிசத்தைக் காப்பி அடிக்காமலும்-கம்யூனிசத்தை இறக்கு மதி செய்யாமலும் "இரவல் பொருளியற் கோட்பாடு" வேண்டாம் என்று புதிய விளக்கம் புகன்றவர் அண்ணா.
முதலாளி-தொழிலாளி என்ற இருபிரிவோடு "நுகர்வோர்" என்ற இடைப்பிரிவு ஒன்றுண்டு என உணர்த்தினார். முதலாளி தொழில் தொடங்குவது நுகர்வோர் பயன் கருதியே. நுகர்வோர் தேவைகட்குப் பொருட்களை உற்பத்தி செய்யவே தொழிலாளி அமர்த்தப்படுகின்றான். எனவே நடுத்தர வர்க்கமானது நுகர்வோரின் பிரதிநிதியாகிறது. முதலாளி வர்க்கமும் நடுத்தர வர்ககமும் நடுத்தர வர்க்கமான நுகர்வோர் (Consumer) நலனுக்காகவே ஒன்றுபட்டுள்ளன. நுகர்வோர் என்னும் நடுத்தர வர்க்கத்தார் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தோடு தான் தோழமை பூண்டிருக்க வேண்டும் என்றும் அண்ண திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பாட்டாளிக்குக் கூட்டர்ளியாகவே நடுத்தர வர்க்கம் இருக்கவேண்டும் என்பதே அண்ணாவின் கட்டளை. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் சார்பு தேவை என்பது அறிஞரின் எண்ணம்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக எத்தகைய பங்குப் பணியை மேற்கொள்ளவேண்டும் எனக் கார்ல்மார்க்ஸ் கட்டளை இட்டுச் சென்றாரோ அத்தகு பணிகளை செவ்வனே செய்து முடிக்கத் தக்கார் நடுத்தரவர்கத்தினரே என்பது பேரறிஞரின் துணிபு.
கானா நாட்டு மறைந்த அதிபர் நிக்ருமா தன் நாட்டுப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி புதிய பொருளாதாரக் கோட்பாடு ஒன்றை உருவாக்கித் தருக என, கானா நாட்டுப் பொருளியற் பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இரவல் பொருளாதாரக் கொள்கை வேண்டாம் என்பதாலேயே புதிய விஞ்ஞான சோஷலிசத்தினை உருவாக்கித் தருமாறு நிக்ரூமா கேட்டார். "நிக்ருமா இசம்" அரும்பும் முன்னரே ஆட்சி இழந்தார் என்பது வரலாறு.
அண்ணாவின் பொருளியற்கோட்பாடு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி ஆய்ந்தறிந்த அறிஞர்களிடம் பொறுப்புத் தரப்படுமானல் புதிய சித்தாந்தமாகவே புவியில் மலரக் கூடும் காலம் கனியும் போது தி.மு கழகம் இந்தக் காரியத்தை ஆற்றிடும்.
(Fabian Socialism) ஃபேபியன் சோஷலிசம்- இட்லரின் நேஷனல் சோஷலிசம் -மாவோ இசம்-மார்க்சிசம்-இலெனிசம்-டிராட்ஸ்கி இசம்-டிட்டோ இசம்-நிக்ரூமா இசம்-ஜனநாயக சோஷவிசம்-என்றெல்லாம் ‘சோஷலிசம்’ பல்வேறு உருவெடுத்து விட்டது. பலரும் தத்தமது மனப்போக்கிற்கு ஏற்ப சோஷலிசத்தைத் திரித்துத் தங்கள் கருத்துகளை அந்த "லேபிளில்" விற்க ஆரம்பித்துவிட்டனர்.
சோஷலிசம் என்ற சொல் எந்த அளவு சீர்கேடு அடைந்து விட்டது என்றல் சாய்பாபாவினó மத போதனையை Spiritual Socialism ஆத் மார்த்த சோஷலிசம் என்று ‘பிளிட்ஸ்’ ஏடு கூறுமளவு சீர் கெட்டுவிட்டது.
பொதுத்துறையில் போட்ட பணம் பயன் தராமல் போகிறது. ஒரு வழிப் பாதையாகவே முதலீடு பொதுத்துறையில் முடங்கிப் போகிறது. பயன் வெறுமையாக அமைகிறது என்பதால் அண்ணா காங்கிரசாரின் கொள்கை ‘போஸ்ட் ஆபீஸ்சோஷலிசம்’ என்று கிண்டல் செய்தார். காந்தியாரின் தர்மதர்த்தா சோஷலிசத்திலிருந்து தபால் ஆபீஸ் சோஷலிசம் என்ற அளவு காங்கிரஸ் முன்னேறி விட்டது என்று தான் கேலி செய்ய வேண்டும்.
இத்துணை திரிபு வாதங்கட்கிடையே தெளிந்த கண்ணோட்டத்துடன் தி.மு. கழகத்திற்கெனத் தனியான பொருளியற் கொள்கையை அண்ண போதித்துச் சென்றுள்ளார். அவர் தொட்டுச் சென்ற துறையை அறிஞர் பெருமக்கள் துவக்கினால்-விளக்கினால் விட்டுச்சென்ற இடத்திலிருந்து விரைந்து முன்னேறி முழுமை பெறமுடியும்.
போலிகளால் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற இயலாது. பொருளாதாரம் தெரியாத புரட்டர்களால் புதிய தித்தாந்தம் உருவாக முடியாது. உலகத் தலைவராக வேண்டிய அண்ண நன்றி கெட்ட தமிழனுக்காகத் தன் ஓயா உழைப்பை நல்கித் தலை சாயாதிருந்தால் "பொருளியற்கோட்பாட்டை" உலகினுக்கு மார்க்சிற்குப் பின்னல் அளித்த மாமேதை என்று புகழை ஈட்டியிருப்பார்!
காலம் நம்மிடமிருந்து அவரைக் கவர்ந்து சென்ற காரணத்தால் கலைஞர் தம் சுட்டுவிரல் அசைவிற்குக் காத்திருக்கும் இலட்சோப லட்சம் தமிழர் தம் பேரியக்கமாம் தி.மு. கழகமே அந்தப் பணியை நிறைவேற்றி ஆக வேண்டியுள்ளது.

2 கருத்துகள்: