ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

"பகுத்தறிவுப் பாவை"

சிற்பியர் செதுக்கிய சிலைகளின் எழிலை


கற்பனை வளத்தை காண்பவர் வியந்து

அற்புதப் படைப்பென அகமிக மகிழ்தலும்

பொற்புடை கலைகளை போற்றலும் நன்றே!

கற்சிலை கடவுளாய் காட்டலும் ஆயிரம்

கற்பனை சூட்டலும் கைதொழச் செய்தலும்

முற்றிலும் மடமை; முனைந்திதை ஒழிக்க

சற்றே விழியே லோரெம் பாவாய்"


வீணாம் மதங்கள் விண்டவை கொண்டு

காணும் உலகினில் கயவர் செயலால்

பேணும் உரிமைகள் பெண்கள் இழந்து

பூணும் தாழ்நிலை போக்க எழுந்து

ஆணும் பெண்ணும் அனைத்திலும் சமமென

நாணம் தவிர்த்து நங்கையர் சொன்னால்

மாணுற முடியும் மடமைகள் தொலையும்

வீணே துயிலா(து) விழித்திடெம் பாவாய்"


பொய்யுரை எல்லாம் புராணங் களாகும்;

செய்வினைத் தூய்மை சீர்மை ஒழுக்கம்

எய்திட இடமிலை சிறிதும் மதங்களில்!

மெய்யினை வளர்க்க மேனி கொழுக்க

பொய்யினை எழுதிப் போனார் அன்று;

தைமுதல் தொடங்கும் தமிழர் ஆண்டே

தையலர் கொள்ளத் தக்கநல் லாண்டாம்;

பைய விழியே லோரெம் பாவாய்"


தள்ளுக நாரதர் திருமால் பெற்ற

பிள்ளைகள் அறுபதின் பெயரால் வழங்கிடும்

ஆண்டுக் கணக்கை ஒழித்து! அழித்து!

Õள்ளுவர் ஆண்டை வழக்கில் கொணர்ந்து

உள்ளுவ தெல்லாம் உயர்வெனச் சாற்றி

கொள்ளத் தகுநெறி கொண்டு குப்பையில்

தள்ளத் தகுவன தள்ளிட எழுந்து

உள்ளக் கருத்தை உரையெம் பாவாய்!"


சோதிடம் பார்த்து சுயவுணர் விழந்து

வேதியன் ஓதிடும் வெற்றொலி மந்திரம்

காதினை துளைக்க கடிமணம் புரிவது

தீதென உணர்ந்து தௌ¤ந்திடு பெண்ணே!

சூதெலாம் ஒழித்து சுயமாய் நினைத்து

காதல் கணவனை கைப்பிடித் தொழுகிடு!

மாதர் காதலால் மாள்க சாதியென

வாதிட எழுந்து வருகவெம் பாவாய்"


பெரியார் பாதையில் பெண்குலம் நடந்து

உரிமைகள் பெற்று உயர்வெலாம் உற்று

அரிவையர் குலமினி ஆணுக்கு உலகில்

சரிநிகர் சமமென சாற்றிட வேண்டும்

பெரியதோர் எழுச்சி பெண்ணினம் பெற்று

அரிதாம் செயல்கள் ஆற்றிடும் நிலைவர

உரிய நேரத்(து) உறக்கம் வருமோ-?

கரிய விழிமலர்ந்து கனன்றிடெம் பாவாய்!"


பஞ்சாங்கம் பார்த்து பாழ்பட வேண்டாம்

எஞ்ஞான்றும் பகுத்தறி விழந்திட வேண்டாம்

நஞ்சனைய மதங்கள் நவிலும் பொய்களை

கொஞ்சமுமே நம்பி குழம்பிட வேண்டாம்

அஞ்சாமல் சாதியின் ஆணிவேர் அறுத்து

அஞ்ஞானம் தொலைத்து அறிவொளி பெற்று

விஞ்ஞானக் கல்வியால் வெற்றினை குவிக்க

அஞ்சன விழிதிற வேலெம் பாவாய்!"

விடுதலை 5.1.1977

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

எண்ணத்திலே கேள்விக்குறிகளை எழுப்ப அறிவியக்கம்

பஞ்சாங்கம் பார்த்துப் பாழ்பட்டுப்போன நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடிகார முள்ளோடு போட்டியிட்டுக் காரியமாற்றியோர் நிரம்பிய மேலைநாடுகள் பொருளாராரத் துறையில் பெரு வெற்றி ஈட்டியதைக் கண்ட பின்னரும், கருத்திலே தெளிவு ஏற்படாமல் காரிருளில் சிக்கிக் கிடக்கின்றோம். கோளின் அசைவே கொணர்க உணவென வாளா இருந்தால் வயிறது தூற்றும். நேரம் சரியாகும்வரை ஏதுஞ் செய்யேன் என்று படுத்துக் கொண்டால் அடுக்கடுக்காய் அல்லல்கள் வரும். கைவரி கண்டு காசு பறிக்க எவனோ சொல்லும் பொய்யுரை நம்பிப் பொழுதெல்லாம் தூங்கிக் கிடந்தால் வறுமையை விரட்டுவதும் வளமையைத் திரட்டுவதும் முடியாமற் போகும். கடவுளுக்கு விழாவெடுத்துக் காசைக் கரியாக்கிக் கொண்டிருந்தால் இடைத்தரகர் ஏப்பம்விட ஏதுவாகுமே ஒழிய எல்லா நலனும் வந்துவிடாது.

அயனோத்சவத்தால் புண்ணிய பலம் அடையலாமென்பது அறிவிலார் மட்டுமே நம்புதற்கேற்றது. பாதோத்சவத்தால் இராஜதோஷ நிவர்த்தி ஏற்படும் என்றும். அமாவாசையால் தாரபுத்திராதி இஷ்டகாமிய சித்தி அடையலாம் என்றும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்னும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்றும் கிருத்திகை கொண்டாடுவரால் சௌக்கியம் விளையும் என்றும், திருவாதிரையால் சகல சம்பத்தும் சேரும் என்றும். மகம் கொண்டாடினால் சுஜன சிரேஸ்டத் துவம் ஏற்படும் என்றும். உத்திரத்தால் சீலம் நேரும் என்றும். சித்திரையால் ரூபலாவண்ய மனைவி கிடைப்பாள் என்றும் ஆரியர் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கலாமா? சித்திரை கொண்டாடாத சீர்திருத்தக்காரர்க்கு அழகிய மனைவி அகப்படாமல்தான் போய்விட்டாளா? சித்திரை கொண்டாடும் பக்திமான்கட்கு அகோர பத்தினியர் இல்லாமலா இருக்கின்றனர் என்றெல்லாம் எண்ணத்திலே கேள்விக்குறிகளை எழுப்ப பகுத்தறிவியக்கம்  இங்கு இல்லையானால் மடமைப்பிடியில் மாக்களென இன்னமும் தான் நம்மவர் உழன்று கொண்டிருக்க நேரும்.

கைராட்டை சுற்றிக் கொண்டும், கலப்பûயால் உழுது கொண்டும், கட்டை வண்டியிலே பயணஞ்செய்து கொண்டும் இராகுகாலம்-எமகண்டம், வாரசூலை என நாளின் பெரும்பகுதியை வீணாக்கிக்கொண்டும், சும்மா இருப்பதே சுகம் என முழங்கிக்கொண்டும், திண்ணைப் பேச்சிலும் தெருமுனைப் பேச்சிலும். சந்துமுனைச் சிந்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டும் உலகில் நிரந்தரப் பிச்சைக்காரர்களாய் நம் நாட்டவர் என்றென்றும் இருக்குமளவு மதங்கள் ஊட்டிய ஆரியமாயையில் இருந்து தமிழினத்தை விடுவிக்கும் பெரும் பொறுப்பு  நம் மீது விழுந்துள்ளது.

கருட வாகனத்தையும், மயில் வாகனத்தையும், பெருச்சாளி வாகனத்தையும், ரிஷ்ப வாகனத்தையும் வெள்ளியாலும் பொன்னாலுஞ் செய்து óவறுமையிலே கடைசிவரை நெளியத்தான் óகற்றுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, விண்வெளியுகத்திற்கு வேண்டிய அறிவைப்ó பெறத் தவறிவிட்டோம்.

"கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி, கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்குங்குதிரை, யானை, குருடுகளே! மாடுளையும் அதன் சாணியையும் பெண் குறியையும் தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் " என்றும்.

"வில்வந் துளசி கொன்றை கொல்லும் அவரி ஆத்திவேம்போ டரசுவன்னி, ஒம்பால் பனையறுகம் புல் ஒதிதருப்பை யாவும் நல்கும் கதியென்றெண்ணி பொருளைக் காணமற் போனீர்-இருளின் மக்களே நீங்கள் " என்றும் சித்தர்கள் பாடி அறிவுறுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது என இன்னமும் எண்ணிப் பார்க்காதிருக்கிறோம். சித்தர்கள்  எழுப்பிய வினக்குறிகள் தொடர்ந்து தமிழன் ஒவ்வொருவனுடைய நெஞ்சிலும் ஒங்கி ஒலித்தாக வேண்டும். விஞ்ஞானச் சித்தனை வேரூன்றி வளர்ந்தாக வேண்டும். பகுத்தறிவு ஒளி பாய்ந்தாகல் வேண்டும்.

"செஞ்ஞாயிற்றுச் செலவு " பற்றிய புறப்பாடல் தமிழனிடம் உண்டு. ஆயின் இடையில் தமிழனுக்கு ஏற்பட்ட மதி மயக்கம் பாடல் வழியில் ஞாயிறு ஏகும் பயணத்திற்கான விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டது. அறிவியல் முனைப்பையும் முன்னேற்றத்தையும் அடியோடு கெடுத்து விட்டது. வறுமையை பரிசாகக் கொடுத்துவிட்டது. ஊக்கத்தை வேரோடு ஒழித்துவிட்டது. உழைக்கும் துடிப்பை மூடநம்பிக்கையும் புராண போதையும் அழித்துவிட்டது.

அணுவைத் துளைத்து என்ற திருவள்ளுவமாலை வரி இங்கே உண்டு. அணுவைப் பிளக்கும் ஆற்றலை நாம் பெற்றோமில்லை. திருவள்ளுமாலை வரியில் கற்றோமில்லை.

பழந்தமிழ் மன்னர்களும் பொறியியல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தே வந்தள்ளனர்.

மன்னர் தம் கோட்டை மதில் மீது நூற்றுவரைக் கொல்லி, நூக்கியெறி பேய்ப்பொறி களிறுப்பொறி. பாம்பும் பொறி சங்கிலிப்பொறி புலிப்பொறி. விற்பொறி, குதிரைப் பொறி, தொடர்வாள். கற்பொறி, தீப்பொறி, நெருக்கு மரம்.கெம்புருகு, வெம்புருகு,நெய் உமிழும் பொறி, அம்புமிழும் பொறி, கல்லுமிழும் பொறி, குரங்குப்பொறி, அரியும் பொறி, நண்நூல் என்று பகைவரைத் தாக்கும் பன்னூறு பொறிகள் இருந்தகை சீவக சிந்தாமணி செப்புகின்றது. இன்று போர்க்கருவிகளை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கற்றுள்ளோம் என்பதைத் தவிரப் புதுவதுபுனையும் ஆற்றல் அற்றுவிட்டோம் என்பதுதானே வெள்ளிடைமலை.

இத்தகு பொறிகளே இல்லாமல் கையும் காலுமே கருவிகள் என மனிதர்கள் அடித்துக்கொண்டிருக்கலாம். கற்கருவி, இரும்புக் கருவி என மாந்த நாகரிகம் மெள்ள மெள்ள வளர்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்போர் அவனியில் இருந்திடக் காண்போமோ?
விண்வெளி யுகத்தில் கட்டை வண்டி வேகத்தில் காரியம் நடைபெற்றாக வேண்டும் என வாதிடும் விந்தை மனிதர்களும் இருக்கின்றரே என்ற வேதனைதான் வெடித்துக்கிளம்புகின்றது.

ஒலி வேகத்தில்-ஒளி வேகத்தில் உலகில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் காலத்தில் நாம் வாழ்கின்றேம்.

ஒலி வேகம் வேண்டும் என உணர்த்த ஒலியை ஒம் வடிவில் வழிபட்ட பரம்பரையினர் நாம் நாம் எனினும் ஆமைகளாய் ஊமைகளாய் ஆற்றலற்றுக் கிடக்கின்றோம்.

ஒளி வணக்கம் - உதயசூரியன் வழிபாடு உலகெல்லாம் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. ஒளிக்கு உருவம் தந்து-தீயை உண்டாக்குகின்ற தீக்கடைக் கோலை "சிவலிங்க " மென வணங்கி வருகின்றோம். தீக் கடைக்கோல் அன்று தீ மூட்டத் தேவையாயிற்று. அதனை அந்நாளில் தெய்வம் ஆக்கிவிட்டனர். பின்னால் சக்கிமுக்கிக்கல் தீயை உண்டாக்கினலும் அதனைக் கும்பிடு வாரில்லை. இன்று தீப்பொறியை உண்டாக்குவதால் குச்சியை தெய்வமெனக் கும்ப்பிடுவோமா? ஒரு பொத்தானை அமுக்கினாலே அறைமின் ஒளி பரவுகின்றது - கண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறேமே ஒழிய பொத்தனையோ-மின்விளக்கையோ வழிபடத் தலைப்படுவதில்லை.

ஒளி வணக்கம் உருவ வணக்கமாகி "நட்டகல்லை தெய்வ மேன்று " சிவவாக்கியர் என்னும் சித்தர் செப்புவதுபோல நாலுபுட்பம் சாத்தும் மடமை நாட்டினில் பெருகிவிட்டது உருவணக்கத்தை ஒழித்து ஒளி வணக்கத்தினை உயிர்ப்பிக்க கித்தர்களும் வள்ளலாரும் முயற்சி செய்யும் அளவு தீமை புரையோடி விட்டது. ஒளி வேகத்தில் விண்ணில் பயணம் செய்யும் கலங்களைப் படைத்திடும் மேனட்டார் ஒளியை வழிபட்டுக் கொண்டிருந்தாரில்ல இந்த உண்மையை பசுமரத் தாணிபோல் தமிழன் ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் பதித்துப்பகுத்தறிவு யுகம் உதிக்கும் வரையில் நம் தொண்டு  நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.

வழிபாடு நம் அறிவியல் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டதும் ஆலயம் தொழுதல் சால நன்றென்று கோயில் கட்டிக்குடமுழுக்காட்டிக் கொண்டிருந்தோமே ஒழிய அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக் காணத் தவறிவிட்டோம். இத்தோடு முன்னோர் அறிந்தவர்களையும் மூடிவைத்து பாழாய் போய்விட்டது.

கண்டவர் விண்டிலர் என்று கணக்கில்லா அறிவுத்துறை செய்திகள் கல்லறைக்கும் போய்விட்டன. சித்த மருத்துவச் சிறப்பு இன்று பெருமையாகப் பேசப்படுகின்றது. எத்தனை சித்த மருத்துவச் செய்திகள் ஒரு சிலரின் தன்னலத்தால் பிறங்கடைகட்குக் கிட்டாமல் எட்டாமல் போய்விட்டது சிலரிடம் சிறைப்பட்டிருந்த அறிவுதான் இப்படிப் பயன் படாமல் போயிற்றென்றால்ல் செல்லரித்த சுவடிகளில் அழிந்துவிட்ட அற்புத மருத்துவத்திற்கு அளவேது.

உள்ள அறிவையே ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ளததால் தவறிவிட்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘நித்திய கல்யாணி’ எனும் மூலிகை இன்று புற்றுக் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. வேர்கள் மூலிகைகள் பற்றி ஆழ்ந்தகன்ற அறிவுசான்ற பழந்தமிழ்ச் சித்தர்க்கு இது தெரியாத சேதியாக இருந்திருக்கமுடியாது. ஆயின் அழிந்து போன ஏடுகளில் அடுத்துவர்க்கு அறிவிக்கப்படாது அழிந்த கருத்துக்களில் இதுவும் அடங்கி இருக்கலாம்.
மேலைநாட்டவர் குற்றவாளிகளை ஒருவகை நோயாளிகள் என்று கொண்டு சில நரம்புகளை மருத்துவம் அல்லது அறுவைப் பண்டுவம் மூலம் திருத்தினால் கொலை, களவு போன்ற குற்றங்களே நிகழாமல் தடுத்திடலாம் என்கிறனர், ஒபன் ஈமர், எட்வர்டு டெல்லர் போன்ற அறிஞர்தம் கருத்தை பேரறிஞர் அண்ணா மனிதனும் மிருகமும் என்ற கட்டுரையில் மேற்சொன்ன தகவலைத் தெரிவிக்கின்றார்.

எழுபத்தீராயிரம் நாடிகளும் பதின்மூன்றாயிரம் நரம்புகளும் மனித உடலில் உள்ளன எனவும், நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசமாக நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறை சுவாசிக்கிறோம் என்றும் திருமூலர் கணக்கிடுகிறார், இந்த அறிவு இதற்குப் பின்னால் ஆய்வைத் தூண்டப்பயன்பட்டிருந்தால் ஈரர்யிரம் ஆண்டுகளில் இங்கேயே மேலே நாட்டில் இன்று முளைவிடும் சிந்தனை என்றோ முளைவிட்டிருக்க முடியும். சில நூல்களை தொடத் தவறினோம் தொட்ட நூலில் அறிவிக்கப் பட்ட செய்திகளை விட்ட இடத்தினின்று தொடரத் தவறினோம். இன்று இடறுகின்றோம். கராத்தே போர் முறைக்கே வித்தே தமிழகத்தில் இருந்து தான் கிடைத்துள்ளது. பழந் தமிழகத்தில் வர்மக்கலை என்றோர் போர்முறை உண்டு இதில் வல்லமை பெற்றதினாலேயே சில அரசர்க்கு வர்மன் என்ற அடைமொழி ஏற்ப்பட்டது. இந்தக் கலை கற்பவரின்றி கற்பிப்பாரின்றி தமிழகத்தில் அடியோடு அழிந்து விட்டது.

அழிந்துவரும் கலைகளை அழியாமல் காப்பதற்கும் அறிவியல் வளர்ச்சியை விளக்கவும் அறிவியக்கம்  நம் நாட்டிற்கு என்றென்றும் தேவையாய் உள்ளது.

நிலந்தரு திருவே பெரிதென்றால்கூடப் பொறியியல் அறிவு பயன்பட்டு இயந்திரங்கள் வேளாண்மையில் இறங்கிப் புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டால்தான் பசிப் பிணியை ஓட்ட முடியும். சோவியத் விஞ்ஞானியர் மனிதனுடைய மூவேளை உணவையும் மாத்திரை வடிவில் ஒரு தீப்பெட்டியில் அடைக்க முடியும் என்றோர் ஆராய்ச்சி மூலம் நிறுவியுள்ளனர். இவ்வராய்ச்சியின் பயன் மக்களை அடையும் போதுதான் பசிப்பிணிகயை வெற்றி கொள்ள முடியும்.

பொறிகளாலே உழைப்பினையே புவிமாந்தர் பெற்றிட்டால் பூமியிலே இருவர்க்கப் பூசல் இல்லாதொழியும். பற்றாக் குறை இல்லாமல் பல்பொருட்கள் பல்கிவிட்டால் பகிர்ந்திடுவதில் பாகுபாடு பாரினில் இருந்திடாது. முற்றுரிமை பெற்றுலகில் முன்னேற்றம் காண்பதற்கு முனைப்போடு உழைப்பவரின் முக மலர்ச்சி தோன்றுவதற்கு வெற்றொலியும் விரக்தி வேதாந்தங்களும் வெட்டிப் பேச்சும் தடையாகும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் வீரம் என கழகம் தோன்றிய முப்பதாம் நாளன்று எழுதிய கட்டுரையில் பேரறிஞர் அண்ணா எழுதுவாரே அந்த வீரமே, விஞ்ஞான வழிச் சிந்தனையை வேரூன்ற வல்லது. அறிவெழுச்சி ஊட்ட வல்லது. அறியாமையை ஓட்டவல்லது.

அகமகிழ முக மலர அவனியுள்ளோர் ஒன்றாகி ஒருலகம் என்றாகி இருவர்க்கம் அற்றொழிய எல்லாரும் எல்லாமும் பெற்றுயர மடமை தொலைய மதவிருள் கலைய பகுத்தறிவொளி பரவ பழந்தமிழர் பண்பும் கலைகளும் சிறந்தொளிர .நம் தொண்டு நாட்டுக்குத் தேவைப்படுகின்றது


உலகப் பார்வை கொண்ட ஒப்பிலாத் தலைவர்

ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்பதுபோல் ஒருவரே அண்ணன்! அவர் உலகத் தமிழரின் பொதுச் சொத்து! தனக்கெனத் தனிச்சொத்துச் சேர்க்காமல் தமிழர்க்காக வாழ்ந்த அரிய கருவூலம்! அறிவுப் பெட்டகம்! அண்ணாவை உள்வாங்கிக் கொண்ட உள்ளங்கள் பல கோடி! அவர் உருவாக்கிய அறிவியக்கம் அரசியல் பதவி தேடி வரும் பறவைகள் இடம் சாரும் ஆலமரம் அல்ல! எழுதத் தெரியாத ஏழைக்கும் எழுத்தும் பேச்சும் ஊற்றெனப் பெருக்கெடுக்க உள்ளிருந்து நல்லறிவு புகட்டிய ஆசான்! எவரும் எப்போதும் அவரிடம இரவல் கேட்காமலே எல்லார்க்கும் எல்லாமும் அளித்த அறிவுப் புதையல் அண்ணா!

சிலையாக வழிபட அல்ல அவர் நம்மை சிந்திக்க வைத்தது! அம்பேத்கர் பிறந்த மண் அவரின் நூல்களை மலிவுப் பதிப்பாக்கி பன் மொழிகளில் பெயர்த்து கருத்துப் பரப்புதலே கடமையெனச் செயல்படுகிறது. இங்கோ அண்ணா நினைவிடத்தில் எரிவாயுவை வீணாக்கி ஒளிவிளக்கு ஏற்றி கோயிலாக்கிக் குதுகலிக்கிறார்கள். சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் சடங்குகள் நடக்கின்றன. அவரின் படைப்புகள் அரசு முயற்சியாக அகில உலகமும் சென்றடைய திட்டமில்லை. மூலக்கதையை மறைத்து தழுவல் இலக்கியங்களை மக்கள் உள்ளங்களில் தவழ விடும் முயற்சி வெற்றி பெறாது, இயல்பான ஆற்றல் இருந்தும் முன்னோடிகள் முகவரிகளை மறைக்கும் மனப்பாங்கு வேதனையளிக்கிறது. தொல்காப்பியத்தை தொலைத்து விட்டு பூங்காவில் நறுமணம் நாடுக என்றால் மனம்ஒப்புமா? வள்ளுவத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு ஓவியம் கண்டு உவந்திடுக என்றால் உள்ளம் ஏற்குமா? இளங்கோவடிகளை மறந்து விட்டு அடியார்க்கு நல்லாரை மட்டுமே அகிலம் போற்றுமா? தன் நூல்கள் தரணியில் பரவ எவருக்கும் ஆசை எழுவது இயல்பு! அதற்காக முன்னூல்கள் மறக்கப்பட வேண்டுமா? வேரின்றி செடி ஏது?விதையின்றி மரமேது? அண்ணாவின்றி நாமேது? தமிழ்நாட்டுக்கே பெயர் சூட்டிய அண்ணாவுக்கு தமிழ்நாட்டரசு காட்டப் போகும் நன்றிக்கடன் அவரின் எழுத்தையும் பேச்சையும் கருத்தையும் எங்கும் பரப்புதலே ஆகும்! நூற்றாண்டிலாவது ஆடம்பரங்களால் அண்ணாவுக்கு சிறுமை சேர்ப்பதைக் காட்டிலும் அவர் நூல்கள் படித்து தம்பிக்கு மடல்கள் படித்து விழிப்புற்றெழுந்த நாம், நம் பின்னவர்க்கும் அறிவியக்க வாயிலை திறந்து வைப்போமாக! அறிவு கொளுத்து வோமாக! மாநிலங்களவையில் அண்ணா முன்மொழிந்த புத்தாக்கச் சிந்தனைகளை நினைவு கூறுவோமாக!

தேசிய இனங்கள் விடுதலையை மையக் கருத்தாக்கமாக வைத்தே மாநிலங்களவையில் 1962 ஏப்ரல் திங்களில் அண்ணா தன் கன்னிப்பேச்சை நிகழ்த்தினார். இந்திய விடுதலைக்கு முன் கபூர்தலா காங்கிரஸ் மாநாட்டில் நேரு நிகழ்த்திய உரையை நினைவு கூர்ந்து இந்திய ஒன்றியத்துக்குள் எல்லா மாநிலங்களையும் இணைத்து ஒன்றாக வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் எந்தப் பகுதியாவது பிரிந்து செல்ல விரும்பினால் காங்கிரஸ் இசைவளிக்கும் என நேரு பேசி இருந்தார். அதை நினைவு கூர்ந்து அந்த பழைய நெருப்பு இன்னும் நேரு பெருமகனாரிடம் கனன்று கொண்டிருக்கும் என தான் நம்புவதாகச் சொன்ன அறிஞர் அண்ணா ஏன் தென்னகத்துக்குச் சுயநிர்ணய உரிமையை தரக்கூடாது? எனத் வினா எழுப்பினார். இன்றளவும் காசுமீரச் சிக்கல் போர்களுக்கும் பல்லாயிரம் உயிரிழப்புக்கும் காரணமாக விளங்குகிறது. சுய நிர்ணய உரிமை மறுக்கப்பட்டதால் தான் தமிழ் ஈழமும் துன்பக் கடலில் தத்தளித்து நிற்கிறது.

நாடுகள் பலவற்றுடன் நட்புறவு என்பது நடைமுறையில் அந்த நாடுகளில் நம்மவர் படும் அவதிகள் தீர வழிகாண்பதில்லை என்பது அறிஞர் அண்ணாவின் வருத்தமாகும். 1966 ல் அண்ணா மாநிலங்களவையில் பேசிய சமயத்தில் அங்கேரி நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். தெருவில் இரு இளைஞர்கள் கிணடவாகப் பேசுவதாக அண்ணா சொன்னார். பசி (Hungry)நாட்டுப் பிரதமரை பார்க்க அங்கேரி (hungary) நாட்டுப் பிரதமர் வந்துள்ளதாக கிண்டல் செய்தாராம். இதைச் சொன்ன அண்ணா நட்புறவுப் பயணங்களால் நாட்டுக்கு என்ன பலன் என்று கேள்வி எழுப்பினார். பயன் ஏதேனும் இருந்திருப்பின் தென்னகத் திலிருந்து பர்மா சென்றவர்கள் ஏதிலிகளாய் எல்லாவற்றையும் இழந்து இந்தியா திரும்பிய சிக்கலுக்கு விடிவு காணப்பட்டிருக்கும். ஆனால் பலமுறை பர்மா போகிறார்கள்- வருகிறார்கள்- சுமுகத்தீர்வு ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். பயனில்லை. நட்புறவு என்பது இருநாட்டுத் தலைவர்களும் ஒருவர் நாட்டுக்கு அடுத்தவர் விருந்தினராகப் போய் திரும்புவதன்று. இரு நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காத நட்புறவால் எள்ளளவும் பயனில்லை என்றார் அண்ணா. அடுத்து அண்ணா 1966 லேயே நாடாளுமன்றத்திலேயே கூறிய அறிவுரைகள் அவரின் தொலை நோக்குப் பார்வைக்குச் சான்றாகத் திகழ்கின்றது. பணக்கார நாடுகளுடன் பந்தபாசம் காட்ட போட்டா போட்டி போடும் தலைவர்களுக்கு மத்தியில் ஆப்ரிக்க நாடுகளுடன் இந்தியா தோழமை பூண்டிட வேண்டும் என்ற அண்ணா மாறுபட்டவர். ஏழைகளையே எண்ணி அரசியல் வியூகம் வகுப்பவர் என்பது வெள்ளிடை மலையென விளங்குகிறது. இன்று 12.4% இந்தியாவின் பணவீக்கம் எனில் ஆப்ரிக்க நாடான ஜிம்பாபாவேயின் பணவீக்கம் 1,500,000% விழுக்காடாகும். ஒரு தேநீர் பருக பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை! ஏழை நாடுகளை உயர்த்திட இந்தியா தன் பங்களிப்பை ஆற்ற அறிஞர் அண்ணா அன்றே அறிவுரை சொன்னார். அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீச அல்ல அண்ணா சொன்ன அறிவுரை!

பிரிட்டன் தன் காலனி நாடுகளை ஒரு அமைப்புக்குள் அடக்கி வைத்திருக்க உருவாக்கியது காமன் வெல்த் அமைப்பு! தென் கிழக்காசிய நாடுகள் காமன் வெல்த் உருவாக்க இந்தியா முனைப்பு காட்ட வேண்டுமென அண்ணா பேசினார். ஐரோப்பிய யூனியன் உருவாகும் முன்பே தென் கிழக்காசிய நாடுகள் தமது பொருளாதார மேம்பாட்டுக்காக ஓரமைப்பிற்குள் திரள வேண்டும் என்றார் அண்ணா. சப்பானிய கூட்டையும் சப்பானிய தொழில் முனைவோர் பங்களிப்பையும் பெற்று இந்தியா ஏற்றமுற வேண்டுமென அறிஞர் அண்ணா எடுத்தியம்பினார்.

அண்ணாவின் பார்வை உலகநோக்குடையது,
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்புப் பேருரையில் அண்ணா தன் உலக நோக்கை அழகுறப் படம் பிறப்பார்.

“கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத – கஞ்சநெஞ்சனின்இதயமில்லாக் கடும்பார்வை விழாத – தேவைகள், குற்றங்கள், பொய்மையே இல்லாத – பழிப்புரையே கேளாத உலகம் – உடலாலும் உள்ளத்தாலும் பிணிவயப்படாத மனித இனம் – எங்கே வாழ்நாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ -எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ – அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கி குடிசையில் – வாழும் மனிதனை இட்டுச் செல்லும் இலட்சியமே அண்ணாயிசம்”

அண்ணாவின் கொள்கைளை மறந்துவிட்டு ஆளுயர வெட்டுருக்களில் அஞ்சல் தலை அளவு அண்ணா படம் போட்டு நூற்றாண்டு எடுக்கிறார்கள். இருளைக் கிழித்து எழுஞாயிறாக கூழைகளுக்காக எளிமையான அரசியல் நடத்திய அண்ணாவின் புகழ் உலகில் ஓங்கும்! உண்மைக்கு அழிவில்லை!

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி,


சனி, 3 ஏப்ரல், 2010

ஜார்ஜ் குணமாகி, மீண்டும் இந்திய அரசியலில் ஒளிவீசவேண்டும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்...


நந்திவர்மன்

டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் - எளிமையானவர், எப்போதும் அவர் வீட்டு கேட் திறந்தே இருக்கும் என்ற வியப்பை அளித்தவர் - தமிழக அரசியல் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற அந்த தலைவர் பற்றி ஒரு செய்தியும் சமீப காலமாக வராமல் இருந்தது. இப்போது சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் என்றும், ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அடுத்து அவர் குடும்ப குழப்பங்கள் பற்றிய செய்திகளும் வந்தன.

ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் நன்கு அறிந்தவன். என்னை ஒரு நண்பராக ஏற்றவர். 'காம்ரேட் நலமா? என்று வரவேற்பார்.. அவரை சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தேன்.. இப்போது அவரைப் பற்றிய நினைவுகள் அடுத்தடுத்து வந்தன...

அக்டோபர் 24, 2009 காலை 11 மணிக்கு 1997-ல் ஈழ ஆதரவு மாநாடு நடந்த அதே தோட்டத்தை பார்த்தபடி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமர்ந்துள்ளார். ஜெயா ஜெட்லி அம்மையாரும் இருந்தார். அப்போது நான் அங்கு செல்லவே 'நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள்' என ஜெயா ஜெட்லி விடை பெற்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிக மிக மெல்லிய குரலில் கேட்டார் “ஹௌ இஸ் ஈழம்?” அதிகம் பேச உடல் நிலை இடம் தராத நிலையிலும் இப்படி கேட்டார். நிலைமையை கூறக்கூற ஜார்ஜ் பெர்னாண்டஸின் கண்ணின் ஓரத்தில் நீர் கசிந்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். பேசிய களைப்பில் கண்ணாடி நழுவ தூக்கத்தில் தலை சாய்ந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸின் உதவியாளர் பெர்னார் அவரை எழுப்பி படுக்கைக்கு கூட்டிச் சென்றார்.

ஒருமுறை இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துவதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார். மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் டெல்லி வந்தனர். திடுமென இந்திய அரசு மாநாட்டைத் தடுக்க முடிவெடுத்தது. மாநாடு நடத்த அரங்கு தரக்கூடாது என்று மிரட்டினார்கள். காவல்துறை அனுமதி அளிக்காது என ஜார்ஜ் பெர்னாண்டஸுக்குத் தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி தடையே போட்டாலும் மாநாடு நடக்குமென ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா மாநாடு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவசரக் கடிதம் அனுப்பினார். ஆஸ்திரேலியாவில் இருந்து முறைப்படி விசாவுடன் இந்தியாவுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டட மனித உரிமைப் போராளி யோகன் மைலஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். 10 மணிநேரம் விமான நிலையத்தில் சிறை வைத்து விட்டு அவரை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பினார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்படுவார் என டெல்லி ஏடுகள் அனைத்தும் எழுதின. தடையை மீறி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டுத் தோட்டத்திலேயே ஈழ ஆதரவு கூட்டம் நடந்தது.

ஒரு சூறாவளியைப் போல இந்திய அரசியலில் நுழைந்தவர் ஜார்ஜ். அவர் மீது ஊழல் புகார் முதன் முதலில் கூறியவர் இந்திராகாந்தி. அமெரிக்காவில் இருந்து 68,000 டாலர்களும் ஜப்பானில் இருந்து 17,000 டாலர்களும் மே-ஜூன், 1974 ரயில்வே ஸ்டிரைக் சமயத்தில் பெற்றுக் கொண்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதனை மறுத்து இந்திரா காந்திக்கே ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடிதம் எழுதினார். உண்மை என்ன? ஜோத்பூரில் அகில இந்திய ரயில்வேமென் ஃபெடரேஷனின் ஐந்தாவது ஆண்டு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பகிரங்கமாக ஜப்பான் ரயில்வேமென் யூனியன் 68,000 டாலர்களுக்கான காசோலையை அகில இந்திய ரயில்வே மென் ஃபெடரேஷனுக்கு அளித்தது. அதேபோல் ஜப்பான் ரயில்வே இன்ஜினியர்ஸ் யூனியன் 17,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியது. ஒவ்வொரு ஜப்பானிய ரயில்வே தொழிலாளியும் இந்தியாவில் ரயில்வே ஸ்டிரைக்கால் வேலை இழந்த இந்தியத் தொழிலாளிகளுக்கு நிவாரணமாக வழங்க உதவிய நன்கொடை இது. இதில் ஜப்பானிய ரயில்வே தொழிலாளர்களின் தலைவர் 6 பேரும் துருக்கி ரயில்வே தொழிலாளர் யூனியன் பிரதிநிதியும் கலந்து கொண்டனர். இதை அமெரிக்கா பணம் தந்தது என்று அபாண்டம் சுமத்துவதா? என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதிலடி கொடுத்தார்.

இவர் ராணுவ மந்திரியாக இருந்தபோது டெகல்கா ஊழல் விவகாரத்தில் அவர்மீது வீண்பழி சுமத்தப்பட்டதை ஒட்டி அவர் பதவி துறந்தார். அந்த சமயத்தில் தன்னந்தனியாக நடந்தே பாராளுமன்றம் சென்றார். அவர் பயன்படுத்த பம்பாய் டாக்சிமென் யூனியன் பரிசாக அளித்திருந்த பழைய பியட் பழுதுபட்டிருந்தது. நான் அப்போது ஒருநாள் அவரில்லத்தில் இருந்தேன். “காம்ரேட் ஆர் யூ ஃபரி?” என்று கேட்டார் ஜார்ஜ். “எஸ் சாப்” என்றேன். இருவரும் நடந்து பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டோம். டிராஃபிக் கான்ஸ்டபிள் திடுக்கிட்டு அவருக்கு சல்யூட் அடித்தார். இப்படி அவர் நடந்து செல்வது அறிந்து வாஜ்பாய், அரசு கார் ஒன்றை அனுப்பி வைத்தார். அரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா புதிய அம்பாஸடர் காரையே பரிசளித்தார். அதை வெளியே எடுத்தால் தப்பாக பேசுவார்கள் என ஷெட்டிலேயே பூட்டி வைத்துப் பல மாதங்களுக்கு பிறகு பார்த்தபோது மரம் விழுந்து, ஷெட் கூரை உடைந்து, கார் நசுங்கி இருந்தது!

டெகல்கா ஊழலை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி 'புக்கான் கமிஷன்' ஜார்ஜ் பெர்னாண்டஸ் மேல் எந்தப் பழியும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இதை ஏற்க மறுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த இரண்டாவது கமிஷனான நீதிபதி வெங்கடசாமி கமிஷனும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிரபராதி என விடுவித்தது. இப்படி, தூக்கி எறிந்த ராணுவ அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்ந்தார்.

ஒரு நாள்... பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் டெல்லியில் இருந்து மும்பைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்தார். ஆனால் அவரால் சீட்டில் நிம்மதியாக உட்கார முடியவில்லை ஏனெனில் அதே விமானத்தில் எகனாமி வகுப்பில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பயணம் செய்து கொண்டிருந்தார்!

இரவு வந்தால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாஞ்சையோடு வளர்க்கும் இரண்டு நாய்கள்தான் அவருக்கு துணை. மணிப்பூர் சமையல்காரர் துர்கா வேண்டிய உணவை தர அங்கேயே தங்கியிருந்தார். தன்னந்தனியாக பெர்னாண்டஸ் வீட்டில் இருந்தாலும் குளிரிலும் ஜிப்பா பைஜாமாவுடன்தான் இருந்தார். ஒரு முறை அவர் வெளிநாடு பயணம் சென்ற போது அழகான கோட் அணிந்திருந்தார். அவரிடம் ஒரு பத்திரிகையாளர் “தோழர் கோட்டு அழகாக உள்ளது எங்கே வாங்கினீர்கள்?” என்றார்! “அதுவா அது அத்வானி இரவலாக கொடுத்த கோட்டு” என்றார் ஜார்ஜ்.

அவரது உடல்நிலை சரியில்லாததால் அவரை மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டது. ஏனெனில் அந்த சமயத்தில் அவருக்கு தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவ்வப்போது மறதி வயப்பட்டார். ஒருவரோடு இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவரிடமே அவர் இன்னும் வரவில்லையா என்று இடையிடையே கேட்பார். இப்படிப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி சொன்னது. ஆனால் 'நான் எப்போதுமே மக்களைச் சந்திப்பவன். எனவே போட்டியிட்டே தீருவேன்' என பெர்னாண்டஸ் சொன்னார்.

பெர்னாண்டஸ் புகழ் பெற்ற அறிஞரான ஹுமாயூன் கபீரின் மகள் லீலா கபீரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகளுக்கு சுசாந்தோ என்ற ஒரு மகன் உண்டு. அந்த மகனுக்கும் ஒரு ஜப்பானிய பெண்ணுக்கும் திருமணம் நடந்துவிட்டது. பெர்னாண்டஸும் லீலா கபீரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால் பெர்னாண்டஸ் தேர்தலில் போட்டியிட போகிறார் என்று அறிந்ததும் உடல் நலம் இல்லாதவரை தேர்தலில் நிற்க வைக்க தூண்டிய அவரது ஆதரவாளர்களை கண்டித்து, பிரிந்திருந்த லீலா கபீர் வெளியிட்ட அறிக்கை வெளியாயிற்று. ஏப்ரல் 21, 2009-ல் தேர்தலில் சுயேட்சையாக பீகார் மாநிலம் முசாபர்பூரில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இன்று பெர்னாண்டஸ் அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு? யார் காரணம்? ஜெயா ஜெட்லிதான்! பெர்னாண்டஸுடன் இந்த நட்பால் அவருக்கு நெருக்கமானார். பெர்னாண்டஸை தன் அரசியல் உயர்வுக்காக கைப்பாவை ஆக்க ஜெயா ஜெட்லி படிப்படியாக மேற்கொண்ட முயற்சிகள்தான் கடைசி காலத்தில் பக்கத்தில் இருந்து அவரை பாதுகாக்க ஆளில்லாதபடி செய்துவிட்டது.

ஜார்ஜ் பெர்னாண்டஸின் இல்லத்தில் பல வருடங்களாக பணியில் இருந்தவர்களை வீட்டை விட்டு ஒவ்வொருவராக விரட்டிய பெருமை ஜெயா ஜெட்லியைச் சாரும். அவரது தனி உதவியாளராக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த இளைஞன் ரமேஷ் பல்லாண்டுகள் பணி புரிந்தார். சுறுசுறுப்பின் மறு உருவமான அந்தத் தமிழ் இளைஞர் வெளியேற்றப்பட்டார்.

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கர்நாடக உடுப்பி பிராமணர் அனில் ஹெக்டே, சோஷலிசக் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் இவருடன் 30 ஆண்டு காலம் இருந்தார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் இவருக்கு வலதுகரமாக இருந்தார். காரோட்டியாக, செயலாளராக, எடுபிடியாக மட்டுமல்ல. கொக்கோ கோலா எதிர்ப்பு போரை ராணுவ அமைச்சரானதும் பெர்னாண்டஸ் தொடர முடியாமல் போகவே அதனையும் ஏற்று அன்றாடம் போராடினார். தினமும் பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன்பு 'கொக்கோ கோலா தேஷ் பச்சோ' என்று முழங்கி 5000 நாட்களுக்கு மேல் நடந்த போராட்டத்தின் கதாநாயகன் அணில் ஹெக்டே. அவரையும் அனுப்பி விட்டார்கள்.

பீகாரைச் சார்ந்த தர்மேந்திரா என்ற உதவியாளர் ராணுவப் பணியில் சேர்க்கப்பட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலத்தை சார்ந்த துர்கா என்ற சமையல்காரர் மட்டும் தாக்குபிடித்துக் கொண்டு இருக்கிறார். அந்த மாளிகையைச் சுற்றியுள்ள அறைகளில் பரிதாபத்துக்குரிய திபெத்திய அகதிகளைத் தங்க வைத்திருந்தார் பெர்ணான்டஸ். அவர்களும் வெளியேற்றப்பட்டார்கள். இப்படி அவரது வீட்டில் அவருக்கு உதவியாக யாருமே இருக்கமுடியாத ஒரு நிலையை ஜெயா ஜெட்லி உருவாக்கினார். மலையாளிகளை மட்டுமே அவர் நம்புவார். இதனால்தான் டெகல்கா அனுப்பிய மலையாளியால் அவரிடம் அணுகி பேசி வம்பில் மாட்டி வைக்க முடிந்தது. எந்தத் தவறுமே செய்யாமல் பெர்னாண்டஸ் மீது அவப்பெயர் வந்தது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், 'உடல்நிலை சரியில்லாததால் போட்டியிட வேண்டாம். மாநிலங்களவை தருகிறோம்' என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார். அதை மீறி நிதிஷ் மீதுள்ள கோபத்தால் பெர்னாண்டஸைத் தேர்தலில் நிற்க வைத்து டெபாசிட் இழக்க வைத்த பெருமை ஜெயா ஜெட்லியை சாரும். நிதிஷ் மாநிலங்களவை பதவி தந்து தலைவரை கௌரவப்படுத்தினார். அதற்குபிறகும் அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள “முழுநேர பணியாளர் அமர்த்த முடியாது அவரே அவரை பார்த்து கொள்வார்” என ஜெயா ஜெட்லி கூறி வந்ததால் விவாகரத்து பெறாமல் பல ஆண்டுகள் பிரிந்து இருந்த பெர்னாண்டஸின் மனைவியும் மகனும் அவரைக் காப்பாற்றுவதற்காக ஜெயா ஜெட்லியை கிருஷ்ணமேனன் மார்க் இல்லத்திலிருந்து வெளியேற்றினார்கள். புத்தாண்டு ஆரம்பத்தில் இந்த கல்தா நடந்தது. ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவதற்கு கூட அவர் கஷ்டப்பட்டார் என்பதை அவரது மனைவி விவரிக்கிறார். 'என்னிடம் பணமில்லை' என்று பெர்னாண்டஸ் புலம்புவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரது பெற்றோர் வழியில் வந்த சொத்துக்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன என்பதை கூறி ஆறுதல்படுத்தியுள்ளனர் மனைவியும், மகனும், மருமகளும்.


ஜார்ஜ் குணமாகி, மீண்டும் இந்திய அரசியலில் ஒளிவீசவேண்டும்.. இது என் இதய துடிப்பு.


நந்திவர்மன் ஆங்கில நூலைப் பாராட்டி


நந்திவர்மன் ஆங்கில நூலைப் பாராட்டி நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய கடிதம் பின் வருமாறு அன்பிற்குரிய திரு. நந்திவர்மன் அவர்கட்கு வணக்கங்கள்! இக்கடிதம் தங்கள் தமிழர் நாகரீகம் என்ற ஆங்கில நூல்குறித்தது.

நூலை வாசித்தபோது, தமிழரென சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் கைவசமிருக்கவேண்டிய ஆவணமென புரிந்தது. தங்கள் எழுத்தும் சொற்களும் இன உணர்வின்பாற்பட்டவை, போற்றுதலுக்குரியவை. எனினும் சொல்லவந்த செய்திகளை தெளிவாக முன் வைக்கிறீர்கள். சொந்த மொழி, சொந்த இனமென்ற மயக்கங்களில்லை, போதையில்லை. சொல்வது உண்மையென்பதால் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்களில் வீச்சும், பாய்ச்சலும், ஏராளம்.

சிந்துவெளி குறித்த தேசிய மாநாட்டில் வாசிக்கபட்ட ஆய்வுக் கட்டுரை ஓர் அரிதான கட்டுரை, பல அரிய தகவல்களைக் கொண்டது. பழமைவாய்ந்த அப்பண்பாடும் மொழியும் திராவிடருக்குச் சொந்தமென பெருமிதத்தோடு சொல்லவந்த நீங்கள் அதற்கு உரிய சான்றுகளையும் அக்கறையுடன் சேகரித்து கட்டுரையை உருவாக்கியிருக்கிறீர்கள். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்களின் ஆய்வுமுடிவுகளை துணைசேர்த்திருப்பது கட்டுரைக்கு வலு சேர்க்கிறது. நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாட்டிற்காக எழுதியதென்ற குறிப்புடன் கூடிய பத்திகளும் பொதுவாகப் பல அரிதானத் தகவல்களைத் தருகின்றன. கவனத்துடன் ஆர்வத்துடனும் இரண்டாவது முறையாக வாசித்தேன். முதல்முறை வாசித்து முடித்தபோதே உங்களுக்கு எழுத உட்கார்ந்து, பாராட்டு என்பது சடங்காக முடிந்துவிடக்கூடாது, வாசிப்பு அனுபங்களை பகிர்ந்துகொள்வதே சரியாதாக இருக்குமெனத் தள்ளிவைத்தேன். மீண்டும் இரண்டாவது முறையாக வாசித்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படியொரு நூலை எழுதியமைக்கும் அதை எனக்குப் பரிசாக அளித்தமைக்கும் மிக்க நன்றி. இல்லையெனில் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்காது. தமிழ் நாட்டில் நல்ல நூல்களை சந்தைப்படுத்துபவர்கள் மிகவும் குறைவென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக மீண்டும் நன்றிகள்.

தொகுப்பிலுள்ள கட்டுரைகளை ஆர்வத்துடன் வாசிக்க முடிந்தது. ஒரு சில கட்டுரைகளை கூடுதல் ஆர்வத்துடன் வாசித்தேன்.

பிரெஞ்சு மொழியோடு தமிழருக்கான உறவுகள் என்ற கட்டுரை நான் விருப்பிவாசிக்க என்ன காரணமென விளக்கவேண்டியதில்லை. ஞானு தியாகு, தாவீது அன்னுசாமி போன்றவர்களின் உழைப்பை அறிவோம். அவர்கள் மாத்திரமல்ல புதுச்சேரியில் அண்மையில் மறைந்த திருமுருகனார் உழைப்பைக்கும் உரிய மரியாதையை புதுவை மக்கள் அளிக்கவில்லை, இப்படி அங்கே இன்னமும் நிறையபேர் இருக்கிறார்கள். அதுபோலவே தேசிகப் பிள்ளையின் உழைப்பு. மிகப்பெரிய தமிழரிஞரை உரியவகையில் அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு, உங்கள் கட்டுரை எனக்கு ஆறுதலாக இருந்தது.

நாராணகுருவை பற்றிய கட்டுரையும் பல புதிய தகவல்களை எனக்களித்தது; அவர் தமிழ் நாட்டில் தேசாந்திரியாகத் திரிந்தார் என்பதை அறிந்தவன்; ஆனால் அவரிடமுள்ள தமிழ் மொழி அறிவும் ஆற்றலுடன் தமிழில் கவிதைகள் எழுதகூடியவரென்பதும், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் குறித்து அவர் எழுதிய தேவாரப் பதிகங்கள் எனற நூலைப் பற்றிய தகவல்களும் எனக்குப் புதியவை. சைவ சித்தாந்தத்தின் கோட்டை என்ற தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையிலும் பொருள்பொதிந்த தகவல்கள் ஏராளமாக இருந்தன. அப்போதே ஜார்ஜ் பூரே என்ற பிரெஞ்சுக்காரர் நம்மவர்கள் தாய்மொழியில் பற்றற்றவர்களாக இருப்பதைச் சுட்டிக்காட்டி வருந்தியதாக நீங்கள் தெரிவித்திருந்த செய்தி யோசிக்க வைத்தது.

செஞ்சியின் பெருமை, தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் என்னை மிகவும் ஈர்த்ததென்று சொல்லவேண்டும், மிக நுணுக்கமான அரிதான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. செஞ்சியையும் தேசிங்கு ராஜனையும் மையமாக வைத்து ஒரு புனைவினை எழுதுவதென முடிவெடுத்திருக்கிறேன். அம்முடிவு உங்கள் கட்டுரை அளித்துள்ள தூண்டுதல்.

சிற்பங்கள் குறியீடுகள் குறித்த பத்தி, புதுச்சேரி வாழ் பிரெஞ்சு குடிமகன்கள் அவர்களுக்கான பிரநிதித்துவ தேர்தல் பற்றிய செய்திகள் தாங்கிய பத்தி, நாகர்களுக்கும் திராவிடர்களுக்குமுள்ள வரலாற்று இணக்கம் குறித்த பத்தி என சிறப்பித்து சொல்ல நிறைய இருக்கின்றன.

பநேரங்களில் தமிழினம் இன உணர்வு மழுங்கிவிட்டதே என நினைப்பதுண்டு, இத்தொகுப்பில் மறைந்த புதுச்சேரி திராவிடக் கழகத் தலைவரின் திருமகன் தமிழ்மணியுடைய மொழியுணர்வை பாராட்டி இருப்பீர்கள். தொகுப்பை வாசித்தபோது கடைசிவரை உங்களுடைய இன உணர்வின் மூச்சினை உணரமுடிந்தது. உங்களைப்போல ஒன்றிரண்டுபேர் இருந்தால்கூட போதும் தமிழும் தமிழனும் கடைத்தேறுவார்கள்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

அண்ணா நினைவேந்தல் பொழிவு

புதுச்சேரிப் பல்கலைக் கழகம், சுப்பிரமணிய பாரதி தமிழ்மொழி இலக்கிய உயராய்வு நிறுவனம் 5.10.2000 த்தில் நடத்திய தமிழக அரசு அமைத்துள்ள அறிஞர் அண்ணா அறக்கட்டளைச் சொற்பொழிவில்
நா. நந்திவர்மன், பொதுச்செயலாளர் திராவிடப் பேரவைதலைமையுரை


அறிஞர் அண்ணா வாழும் காலத்தில் மட்டும் அல்ல. மறைந்த பின்னரும் சாதனைகளைச் செய்து காட்டியவர். சாகாப் புகழையீட்டியவர் அவர் மறைவுக்கு:

எண்ணா யிரங்கோடி உள்ளமும் ஆவியும் ஏக்கமுற்றும்

பண்ணா யிரங்கோடி பாடி வருந்திப் பரிதவித்தே

உண்ணா துறங்கா துழன்றதும் மாண்டதும் உண்மையென்றால்

அண்ணா துரையாம் அறிஞர் புகழ்க்கோர்அளவுமுண்டோ?

என்று பைந்தமிழ் வாழுலகின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடினார்! அண்ணா மறைவுக்கு வாடினார்.

அறிஞர் அண்ணாவின் மறைவு உலகிலேயே பேரளவில் 15 மில்லியன் மக்கள் பங்கேற்றமைக்காக Guinness Book of World Records களில் இடம் பிடித்தது. அவர் மறைவன்று நானெழுதிய கவிதை பல்லாண்டுகள் கழித்து 1976 பிப்பவரி 3 அன்று முரசொலியில் நெருக்கடி நிலையில் வெளியாயிற்று.

"விழிநீராலே நோயினையே விரட்டுதல் முடியுமென்றால்

வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன், வியன்தமிழில்

கவிதைகளைப் பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால்

கோடிகோடிப் பாடல்களைக் குவித்திருப்பேன், பாசமிக்க அண்ணனையே

அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்

அகமகிழ்ந்து அளிதிருப்பேன் அவன்நோயை எனக்களிக்கும்

வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்.

வழியில்லை அழிந்துவிட்டான், வார்த்தையின்றி தவிக்கின்றேன்."

என்று அவர் மறைவுக்கு மொழியிழந்து விழித்தேன். விழிநீரை வடித்தேன். நாடெங்கும் அவர் சிலைகள், நாள்தோறும் அவர் பெயரில் புதிய புதிய கட்சிகள், வங்கக் கடலோரமென வருணிக்கப்படும் தங்கத்தமிழர் கடலருகில் அவர் கல்லறை!அதை கோயிலாக்கிச் சூடம் ஏற்றும் சுயமரியாதைச் சுடர்கள். எண்ணாயிரம் கோடித் தமிழ் உள்ளங்களில் அன்றிருந்த என் தலைவன் கொடிகளிலே படமாக அசைந்தாடுகின்றான். முச்சந்திகளிலே காக்கைகளின் எச்சில் மழையில் நனைந்து கதிரவனின் வெப்பத்தால் கருகி மெருகிழந்து நிற்கின்றான்.

ஆ னால் இந்த கணினி யுகத்தில்உலகளாவிய வலைத்தளங்களில் அண்ணாவைப் பற்றி விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளே உள்ளன. அந்த பதிவுகளை செய்த ஒரு சிலராவது அண்ணாவை மறவாதிருப்பது மனத்துயருக்கு மருந்தாகிறது. அவரின் கொள்கைகளை குப்பையிலே வீசிவிட்டு அவரின் கருத்துக்களை கண்டும் காணாமல் சீர்குலைந்து சிறுமைப் படுத்தி தங்களை முன் நிறுத்துவதில் சிலர் வெற்றி கண்டுள்ளனர்.

அண்ணா எண்ணிய தமிழின ஒருமைப்பாட்டுணர்வு முன்னிலைப்படுத்தப் படவில்லை. அவரின் பகுத்தறிவுப் பயணத்தை திசைமாற்றியவர்கள் பக்தர்களாக வேடம் கட்டுகிறார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் அறிஞர் அண்ணாவை எண்ணி வியக்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

 அந்த தமிழர்களை தமிழ்த்தேசம் என்ற உலகளாவிய வலைப்பின்னல் தொகுப்பு நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அண்ணாவின் பரம்பரை என்பது ஆரியமாயைக்கு அடிமையானவர்கள் அல்ல. அண்ணாவின் வழியினர் என்பது கம்பரசம் பருகி போதையில் ஆழ்ந்து புத்தியை தொலைப்பவர்கள் அல்ல! மாஜி கடவுள்களை எழுத்தால் அடையாளம் காட்டிய அண்ணாவின் பிறங்கடைகள் மூகாம்பிகைகள் முன்பு மூங்கையினர் ஆயினர். பணத்தோட்டம் தீட்டி பொருளியல் சுரண்டலைச் சாடி அண்ணா பெயரால் ஆட்சிகளில் அமர்ந்தவர்கள் பன்நநட்டு நிறுவனங்களுக்கு பல்லக்கு தூக்கினார்கள். தீ பரவட்டும் என மடமை இருளைச் சுட்டெரித்த மாமேதை பெயரால் அரசியலில் அங்காடிகள் திறந்தவர்கள் மூடப்பெருநெருப்பில் குளிர் காய்ந்து மஞ்சள் வண்ணங்களில் மங்கலம் தேடினார்கள். கறுப்பை சிகப்பை, கழகங்களின் உயிர்த்துடிப்பை, நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவரெனப் பெரியாரைப் போற்றிய பேரறிஞரின் கொள்கைப் பிடிப்பை குலைத்தார்கள். ஆனால் சப்பான் நாட்டில் வாழும் Sacho Sri Kantha தனது Anna’s Legacy மூலம் யார் அண்ணனுக்கு ஏற்ற தம்பியர் என அனைத்துலகுக்கும் அடையாளம் காட்டுகிறார். அண்ணாவின் கொள்கைகளை தமிழ்நாட்டுத் தம்பியர் மறந்தாலும் இருக்கிறார் ஈழநாட்டுப் தம்பியர் இனமானங்காக்கவென்று நம்பிக்கை ஒளியை நம்நெஞ்சில் பாய்ச்சுகிறார்.

"If Anna’s Dravidian Nationalism has to be counted as a failure, then the Gandhian, Rooseveltian and Leninist - Stalinist ideals also have met the same fate in their places of origin. However, Gandhian ideals were picked up by Martin Luther King Junioor in America and these led to advancement of civil rights for Blacks in the 1960s. The liberal - democratice ideals of Roosevelt got rooted (however imperfectly) and supplanted the existing feudalistic social arrangement in Japan. Even the Leninist - Stalinist ideals found roots in Cuba under the leadership of Fidel Castro in 1959 and is still not supplanted, despite aggressive bullying by Yankee capitalism Similarly, though Anna’s ideology of a ‘Separate state for Tamil’s became a lost cause in India, it did become a rallying cry for the younger generation of Eelam Tamils in mid 1970s. Thus, Anna’s legacy lives in Eelam."

அண்ணாவின் திராவிடத் தேசியம் தோல்வியடைந்தது என்று கணக்கிடப்பட்டால், காந்திய, ரூசுவெல்டிய, இலெனின் , இசுடாலினிய கொள்கைகளும் தோன்றிய மண்ணில் தோல்வியையே தழுவியுள்ளன. ஆனால் காந்தியக் கொள்கைகள் மார்டின் லூதர் கிங்கால் அமெரிக்க நாட்டில் கைக்கொள்ளப்பெற்று 1960 களில் கறுப்பரின மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கப் பயன்பட்டன. ரூஸ்வெல்ட் அவர்களின் தாராள மக்களாட்சிக் கோட்பாடுகள், சப்பானில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சமுதாய ஏற்பாட்டை பெயர்த்தெடுத்து அதற்குப் பதில் நிலை பெற்றன. இலெனினிய இசுடாலினிய கொள்கைகள் 1959 அளவில் பிடல் காசுடிரோ தலைமையில் கியூபாவில் வேரூன்றின. அமெரிக்க முதலாளியம் அதிதீவிர நெருக்குதல் தந்தும் இன்றளவும் அப்புறப்படுத்தப்படாமல் கியூபாவில் நிலைபெற்றுள்ளன. அதே போல் தமிழர்களுக்கென்று தனித்தாயகம் வேண்டும் என்ற அண்ணாவின் வேணவா இந்தியாவில் நிறைவேறாமல் போயிருப்பினும் 1970 களில் ஈ£த்தமிழரின் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைக்கும் மையமாக மலர்ந்தது! இவ்வாறே அண்ணாவின் பாரம்பரியம் ஈழத்தில் வாழ்கிறது." என்கிறார் அக்கட்டுரையாளர்! 20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழரை இனங்காட்ட உருவான வலைத்தொகுப்பின் உட்பிரிவு இக்கட்டுரையை தாங்கி வெளிவந்துள்ளது.

10.9.2000 அன்று கணினி வழியே கவின் தமிழை வளர்க்க ஆற்றத்தகு கடமைகள் பற்றிய கருத்தரங்கில் மூவாயிரம் பக்கங்களை கொண்ட தமிழ் வலைத்தொகுப்பில் அறிஞர் அண்ணாவிற்கு தனியாக வலைத்தளம் இல்லை என நான் வருந்தி இருந்தேன். இதனை தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பு tamilnation.org என்ற முகவரியில் Tamil and Digital Revolution உட்பிரிவில் முழுமையாக வெளியிட்டுள்ளனர்.

உலகளாவிய வலைப்பக்கங்களில் அண்ணாவை எந்த ஒரு தேடுபொறி மூலம் தேடினாலும் தமிழ்த்தேசம் வலைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரையே கண்முன் தோன்றுகிறது. அதிலே சப்பான் நாட்டு தமிழ் அறிஞர் கட்டுரையை தவிர்த்து அறிஞர் அண்ணாவைப் பற்றி இன்னும் ஒரு கட்டுரை உள்ளது. அதை எழுதியவர் இன்று அண்ணா பெயரால் அரசியல் அங்காடிகளை வெற்றிகரமாக நடத்துவர் வரிசையில் இடம்பெற்றவர் அல்ல. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்கு திரு. ஏ.பி. சனார்த்தனம் எம்பி. 1981 இல் எழுதிய கட்டுரை அது.

அண்ணாவை இழந்து பெருஞ்சித்திரனார் பாடியவாறு எண்ணாயிரம் கோடி உள்ளம் அழுததே, அவர்களில் அண்ணாவின் புகழை வலைத்தளங்களில் நிலைநிறுத்த தொலைக்காட்சிகளில் அண்ணாவின் கொள்கைகளுக்கு குரல் கொடுக்க, ஆட்கள் அருகிவிட்டனர் என்பது வெள்ளிடமலை.

தொலைக் காட்சிகளை அறிவியல் தமிழ்க்குப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சமுதாயத்தை சினிமா நடத்தப்பெறுகிறது. அதில் சி.என். அண்ணாத்துரை அவர்களின் வாழ்க்கை வரலாறும் இலக்கிய படைப்புகளும் என்ற வலைப்பக்கங்களின் என்ன கூறப்பட்டுள்ளது?

வாழ்க்கை வரலாறு 1909 செப்டம்பர் 15 அன்று காஞ்சிபுரத்தில் திரு. நடராசன் பங்காரம்மாளுக்கு மகனாக ஒரு நடத்தரக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். "சென்னை கோவிந்தப்பன் பள்ளியில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு." ஈ.வே. இரா. (இராமசாமிப்பெரியார்) பற்றாளராகி நீதிக்கட்சியில் சேர்ந்தார். (இது 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது). குடியரசு ஏட்டியில் துணையாசிரியராக பணியாற்றினார். 1942 திராவிட நாடு தமிழ் வார ஏட்டை துவக்கினார். 1949 தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் 15 இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றது. அண்ணா எதிர்கட்சி தலைவர் ஆனார். 1959 உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.கழகம் அதிக இடங்களை வென்றது. 1962 மாநில சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 138 இடங்களை வென்று மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்றது. அண்ணா முதலமைச்சர் ஆனார். 1968 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். 3பிப்ரவரி 1969 புற்றுநோயால் இறந்தார்.

பெருவாழ்வு வாழ்ந்த அந்த பேரறிஞர் பற்றிய வாழ்க்கை பதிவு இவ்வளவுதான் அதற்காக வருத்தப்படுவதா? இல்லை அண்ணாபெயரை தினம் சொல்லும் ஆளும், எதிர்க்கட்சிகளும் செய்யாத ஒரு வரலாற்றுப் பதிவை இந்த மட்டுமாவது செய்தனரே என தமிழ் மின்னியல் நூலகத்தாரை பாராட்டுவது தெரியவில்லை. அடுத்தபடியாக சில வரிகளே சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிகளை மேற்கோள்காட்டக்கூட நம்மால் முடியாது. படிஉரிமைச் சட்டப்படி இன்தாம்காம் ஒப்புதல் பெறாமல் ஒரு வரிகூட நாம் எடுத்தாள முடியாது.

அண்ணாவை உரிய முறையில் பதிவு செய்ய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல நான் பொதுச் செயலாளர் ஆக உள்ள திராவிடப் பேரவையும் தவறிழைத்து தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டு இருக்கிறோம். வலைத்தளங்களில் அண்ணாவின் நூல்கள், பாராளுமன்ற சட்டமன்ற பேச்சுக்கள் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். அண்ணாவைப்பற்றிய ஆய்வுகள் தொகுப்படவேண்டும். அரசே அண்ணாவின் முழுத்தொகுதிகளை வெளியிடவேண்டும் இல்லையேல் பல்கலைக்கழகங்களாவது இதை பதிப்பிக்க வேண்டும் வலைத்தளங்களில் ஏற்றவேண்டும். முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்வோர் வலைதளங்களில் அண்ணா உள்ளிட்ட தமிழ் அறிஞர் மற்றும் தமிழ் இலக்கியப் பதிவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகங்களில் ஆற்றிய பேருரைகள் இன்றும் தமிழர் நினைவு கூறத்தக்கவை. நிலையும் நிணைப்பும் என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அந்நாளில் பேசியதில் சில "தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியர்கள் தமிழர்களை பார்த்து என்ன எண்ணியிருப்பார்கள் பச்சைப் புற்றரைக்கும பஞ்சமான நாட்டில் இருந்து வந்தவர்களின் மனதிலே தமிழ் நாட்டிலே உள்ள மாந்தோப்புகளும். மண்டபங்களும், சாலைகளும், சோலைகளும், குன்றுகளும், கோபுரங்களும், வாவிகளும் வயல்களும், எத்தகைய எண்ணங்களை தந்திருக்கும்? நிச்சயம் தமிழர்களைப் பார்த்து கேட்டு இருப்பார்கள் மெல்லிய அடையணிந்து இருக்கிறீர்களே அது ஏது என்று? தமிழர்கள் அது எங்கள் கைத்திறமை இந்திரன் தந்த வரப்பிரசாதம் இல்லை என்ற கூறியிருப்பார்கள். இமையம் வரை சென்று உங்களது இலச்சினையை பொருத்திருக்கிறீர்களே அது எப்படி என்று கேட்டு இருப்பார்கள். அதற்கு தமிழர்கள்அது கருவாழ்வார் கபாட்சத்தால் அல்ல! எங்கள் தோள் வலிமையினால் என்று கூறியிருப்பார்கள். இன்றும் உங்களது இசையின்பமாக இருக்கிறதே அது எப்படி என்ற ஆரியர்கள் தமிழர்களைப் பார்த்து கேட்டிருப்பார்கள். அதற்கு தமிழர்கள் நாரதர் மீட்டிடும் தேவகானம் அல்ல! நாங்கள் கண்டு பிடித்த யாழின் தன்மையது என்று கூறியிருப்பார்கள். மீண்டும் அந்த யாழ் ஏது? என்று கேட்டிருப்பார்கள். அது திருப்பாற்கடலில் கடைந்தெடுத்தது அல்ல என்று கூறியிருப்பார்கள். ஆரியர்கள் முத்தைப்பார்த்து அது என்ன என்று கேட்டிருப்பார்கள் அது தேவலோகச் சரக்கல்ல! எங்கள் தீரர்கள் கடலில் மூழ்கி கண்டெடுத்த முத்து என்று கூறி இருப்பார்கள். தமிழர்களின் அந்தக் காலநிலை அவர்களுக்கு அத்தகைய நினைப்பைத்தான் தரும் என்று பழங்காலத் தமிழகத்தை ஏக்கத்தோடு படம் பிடித்தார் அண்ணா.

இக்காலத் தமிழகத்தை அண்ணா படம் பிடிக்கிறார்.

"விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்று இருக்காது. நான் இதோ பேசுகிறேன், என் முன் ஒலிப்பெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதை பெரிதாக்கி நாலா பக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும் படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறியிருப்பார்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டிருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள். கப்பல் கனமாக இருந்தும் அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிபாருங்கள். ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். அல்லது ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறி பாருங்கள். ஆச்சரியமாக கேட்கமாட்டார்கள்! அவைகளில் அதிசயம் இருப்பதாக அவர்களுக்கு தோன்றாது! அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும் மறுகணம் அதை மறந்து விடுவார்கள்!
அற்புத சக்தியிடம் உள்ள அபாரநம்பிக்கையும் மதிப்பும் அவைகளிடம் இருக்காது. விஞ்ஞானத்திடம் அவர்களுக்கு மதிப்பும் இருப்பதில்லை. காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டு கண்டு பிடிக்கவில்லை. பென்சிலினை கண்டுபிடித்தவர் எங்கள் தாத்தா, மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எங்கள் மூதாதையர் என்று இருந்தால் அதன் அருமை தெரியும். எவ்வளவு சிந்தனை, எத்தனை இரவுகள் விழித்து எதிர்ப்பை பார்க்காமல் கேலி கண்டனங்களை பொருட்படுத்தாமல், ஆபத்துக்கு அஞ்சாமல மூளை குழம்புமே, கண் குருடாகுமே, கால் முடமாகுமே என்று யோசிக்காமல் கஷ்டப்பட்டு விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் மேல் நாட்டார்கள். எனவேதான் அவர்கள் விஞ்ஞானத்தைப் போற்றுகிறார்கள். அவர்களுக்கு அதன் அருமை தெரிகிறது. அதனிடம் அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சாதனத்தைக் கண்டுபிடிக்கவும் கஷ்டப்படவில்லை. கஷ்டப்பாடாமல் சுகம் எப்படித்தெரியும்? ஆதலால்தான் இவர்களுடைய நாக்கில் ஏரோபிளேன் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நர்த்தனமாடுவதில்லை. ரயில் கண்டுபிடித்தவர்களுடைய பெயர்கள் நெஞ்சில் நடமாடுவதில்லை. விஞ்ஞானம் இந்த நாட்டில் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில் வீசிய பனிகட்டிபோல், குருடனிடம் காட்டிய முத்துமாலையைப் போல, செவிடன் கேட்ட சங்கீதம்போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது.

மதிப்புற்றிருக்கவேண்டிய பொருள் மதிப்பற்றிருப்பது நல்லது அல்ல! விஞ்ஞானம் மதிப்புபெற மாணவர்கள் உழைக்க வேண்டும்! மாணவர்கள் மக்களிடத்தில் சென்று அவர்கள் மனதில் உள்ள மாசை நீக்க வேண்டும். மனதில் உள்ள மாசை நீக்கி பகுத்தறிவைப் பரப்பிவிட்டு பிறகு விஞ்ஞானத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யவேண்டும் அப்போது தான் மக்கள் மனது தௌ¤வடைவர் அறிவை போற்றுவார்கள்! அஞ்ஞானத்தை கைவிடுவார்கள். உண்மையை நம்புவார்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்!

அண்ணா மாணவர்களுக்கு கூறி மாணவர் அணிதிரட்டி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்தி, அவர் மறைந்த போனபிறகு நெருக்கடிக்காலத்தில் பகுத்தறிவுப் பணி முடக்கப்பட்டதை நினைவூட்டி மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை சுட்டிக்காட்டி 3.10.76 கழகக்குரல் வார ஏட்டில் நான் எழுதியதில் இருந்து சில வரிகள்.

இந்த நிலையில் ஓர் ஏக்கம் இன்னமும் அரைத்த மாலையே அரைப்பது போல காதலையும், மோதலையும் கருப்பொருளாக்கிக் கதைவாணர்கள் தமிழில் எழுதிவரும் நிலைக்கண்டு எழும் நெஞ்சின் வேதனையில் வடிக்கப்பட்ட ஒரு சொல்! விஞ்ஞானக்கதைகள் கற்பனைகள் தமிழ் மொழீயில் இல்லையே என்ற குறை இன்னமும் நீடிக்கலாகாது. தி.மு.கழகத்தின் எழுத்தாளர் பட்டாளம் எதிர்காலத்திற்கு செய்யக்கூடிய சிறப்பான சேவை இந்த குறிக்கோளை செயல் ஆக்குவது தான்"

எவரும் அந்த குறிக்கோளை நிறைவேற்றவில்லை நானும் செய்ய தவறினேன்.
"விஞ்ஞான கற்பனையை எழுத்தாளர்கள் மேலைநாடுகளில் விற்பனை செய்து வருகின்றார்கள் இது, விஞ்ஞானியர் முயற்சி வெற்றி எய்தத் துணையாக தூண்டுகோலாக அமைகிறது.

இங்கோ கடவுளரின் காமக்களியாட்டங்களைக் காசாக்கிக் காவியமாக்கிய காலம் போய் இன்று கடை காட்டி இடை காட்டிக் கச்சிறுகும் புன்மார்பின் பிதுக்கம் காட்டி கணிகையர்கள் ஆடுதலைக் கலையென்று காட்டி அவர் உடை நீக்கி உறுப்பெலாம் காட்டுதலை எழுத்தாக்கிப் பிழைப்பதையே தொழிலாக்கி எழுத்தின் தரத்தை இழித்திடுவார் செழித்திடுவார்செந்தமிழ மண்ணில்!

காலைக் கதிரழகைக் கண் விழித்தும் பாராமல் மேலைச் செழுவானின் மாணழகை நோக்காமல் இயற்கையின் அசைவுகள் ஒவ்வொன்றிலும் இலங்கிடும் எழிலை எண்ணாமல், விரிவானை, விண்வெளியை, மண்ணிற் புதைந்திருக்கும் கனிச் செல்வத்தை அதனைப் பெற்று இந்தப் பாரெய்த வேண்டிய மேம்பாட்டை, பண்பாட்டை நினைக்காமல், மங்கை முகத்தழகு மட்டுமே நினைப்பதும், பெண் பின் ஓடுவதிலேயே பொழுதினைப் போக்கவதுமாக ஒரு வேலையற்ற வீணர் கூட்டத்தை இன்று எழுத்துலகும் சேர்ந்து உருவாக்கி விட்டது! நேர்ந்த தவற்றை நிவர்த்தி செய்து, நல்வழியைக் காட்டக் குறிக்கோளோடும் கொள்கையோடும் எழுத்தாளர் முனைய வேண்டும்.

தமிழ்நாட்டை மொழி வழி மாநிலமாக பிரித்த பிறகும் மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே காங்கிரஸ் ஆட்சியிலே அழைத்து வந்தார்கள். விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் 78 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தபோதும் காங்கிரசார் கற்பாறைப் போல் நின்றார்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ளவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டால் தமிழ் தேசியம் வென்று விடும் இந்திய ஒன்றியம் உடைந்து விடும் என்று வீணான அச்சம் பச்சைத் தமிழரை வாட்டிவதைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பூபேசு குப்தா அவர்களை தமிழர்கள் என்றென்றும் போற்றுவார்கள். ஏனெனில் அவர்தான் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட அரசியல் சட்டத்தின்முதல் அட்டவணையில் உள்ள ஏழாவது பதிவை திருத்தம் செய்யவேண்டும் என்று 1961 இல் பாராளமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்தவர் ஆவார்கள். பாராளுமன்றத்தில் அந்த தீர்மானத்தின் மீது அறிஞர் அண்ணா அவர்கள் மே 1963 இல் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்க தக்கது. அண்ணா பேசுகையில் குறுக்கிட்டு பேசிய நா. மகாலிங்கம் இந்த பெயர் மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் விளைய போகிறது-? என்று கேட்டார். அதற்க பதில் அளித்த அண்ணா பாராளுமன்றத்தை லோக்சபா என்று அழைத்தபோதும், மாநிலங்கள் அவையை ராஜ்யசபா என்று அழைத்தபோதும் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள் அதே பயனை மதலாஸ் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றப் பெறும்போது அடையும் என்றார்.

அந்த தீர்மானம் காங்கிரசு பெரும்பான்மை பெற்றிருந்த பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் மொழி உணர்ச்சியால், மூண்டெழுத்த சினத்தீயில் காங்கிரசை சுட்டெரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றப் பிறகுதான் தமிழ்நாடு தமிழநாடாக பெயர் மாற்றம் பெற்றது! பல்வேறு மாநிலகளின் ஒன்றியமான இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலம் தனக்குரிய பெயரை சூட்டிக்கொள்ள எவ்வளவு ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது! தமிழ் தேசியம் உலகின் மூத்த மொழி குடும்பத்தின் பண்பாட்டு மீட்சிப் போரை உள்ளடக்கியதாகும். அப்போருக்குரிய மறவர்களாக அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விலைவாசிப் போராட்டத்தின் போது பெரும அளவ கைதியானாலும் மன்னிப்பு கோரி பிணையில் வெளிவந்தனர். அந்த பின்னணியில் தான் சீன போரின் போது திராவிட நாடு கோரிக்கையை அண்ணா அவர்கள் கைவிட்டார்கள்! அது கோழைத்தனம் அன்று. கையில் கிடைத்த திராவிட முன்னேற்றக் கழகமாம் கருவியை கொண்டு இயன்றவரை தமிழ்ப் பண்பாட்டு மீட்சிப் போரை முன்னெடுத்து செல்ல நாணலை போல் வளைந்து கொடுத்தார் அண்ணா.

அண்ணா தமிழர்களை பண்படுத்த தமிழ் வென்றெடுக்க கூடிய வீரர்களாக தமிழர்களை உருவாக்க கால அவகாசம் தேவை என்று கருதியே வளைந்து நௌ¤ந்து கொடுத்தார். அவர் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழிந்து பிறகு அறிவு மயக்கும் அகற்றும் அறிவியக்கம் என்ற தலைப்பில் நம் நாடு இதழியல் 12.2.78 அன்று எழுதியதை மீண்டும் உங்கள் முன் நினைவூட்டுகிறேன். இருபத்திரெண்டு ஆண்டுகளுக்க முன்பு நான் எழுதிய கட்டுரை. அன்று கலைஞர் ஆட்சியில் இல்லை. இன்று கலைஞர் ஆட்சியில் இருக்கிறார்! அவருக்கு பின்னால் அண்ணாவின் எழுத்தை உள்வாங்கி நான் எழுதினேன்! அண்ணா நம்மை எல்லாம் எதற்காக உருவாக்கினார் என்பதை நினைவூட்டினேன். ஆனால் கலைஞரோ, கழகமோ தமிழக அரசோ, தமிழகத்தை ஆண்ட ஏனைய திராவிடக் கட்சிகளோ எதுவும் செய்யவில்லை தமிழகம் அப்படியே இருக்கிறது. இதை அண்ணாவின் மொழியில் சொல்வதானால். ஏ! தாழ்ந்த தமிழகமே! தேய்ந்த தமிழ்நாடே! தன்னை மறந்த தமிழ்நாடே தன்மானம் அற்ற தமிழ்நாடே! கலையை உணராத தமிழ்நாடே! கலையின் இலட்சணத்தை அறியாத தமிழ்நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ்நாடே! ஏ சோர்வுற்ற தமிழ்நாடே!

வீறுகொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று ! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலக சிற்பிகளைப் போற்ற என்று மாணவரிடத்திலே அண்ணா மன்றாடினார். அவர் உள்ளே விடுதலை நெருப்பு அனையாமல் எரிந்தவண்ணம் இருந்தது. அந்த விடுதலைக் கனவை பிரிவினை தடைச் சட்டம் வந்த பிறகு அரசியல் தந்திரங்களுக்காக பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு அது பற்றி தம்பிகளுக்கு விளக்க அவர் எழுதிய இன்பஒளி நாடகத்தில் இப்படி சொல்கிறார்.

விடுதலை என்ற பேச்சு அளித்திடும் இன்பத்துக்கு ஈடாக வேறு ஏதும் இருந்திட முடியாது. பெற்றோம் விடுதலை என்று கூறிடும் போது மகிழ்ச்சி மட்டும் அல்ல, எங்ஙனம் பெற்றோம் விடுதலை என்பதனை நினைவில் கொண்டிடவும் அதன் பயனாக எழுச்சி மிக கொண்டிடவும் முடிகிறது. எழுச்சியுடன் நிற்பது இல்லை. பெற்றோம் வாழ்வு என்ற நம்பிக்கையையும் கருதுகிறது. எனவே எதிர்காலம் தெரிகிறது. எழில் தெரிகிறது ஏற்றம் தெரிகிறது. மங்கிய கண்கள் ஒளிவிடவும் வாடிய முகம் எல்லாம் மலர்ந்திடவும். என்றார் அண்ணா.

அண்ணாவை நினைத்து அவர் கனவை நிறைவேற்ற சூளுரை ஏற்போம்.

பெரியார் பெருந்தொண்டு

காரிருளில் கடும்புயலில் கலஞ்செலுத்தும் மாலுமிபோல்


கடும்போரில் கணைகளேற்றும் கலங்காத வீரன் போல்

பேரிடரை எதிர்ப்பவராய் பெரியாரே இருந்திட்டார்

பெருந்துணிவு இருந்ததனால் பெருந்தொண்டு புரிந்திட்டார்

நேரியவோர் பாதையிலல்ல நெருப்பாற்றில் நடந்திட்டார்

நெருக்கடிகள் தமக்கிடையே நிறையுழைப்பு நல்கிட்டார்

பாரிதனில் இவர்க்கிணையாய் பகுத்தறிவாளர் எவருண்டு?

பயன்கருதாப் பேருழைப்பே பெரியாரின் பெருந்தொண்டு!"



கல்லடிகள் தமையேற்றும் கருத்துரைகள் வழங்கிட்டார்

காழ்ப்புரைகள் தமக்கிடையே கடும்பயணம் செய்திட்டார்

சொல்லடிகள் தந்தவர்க்கும் சுயவுணர்வு அளித்திட்டார்

சோர்வின்றி பகையெதிர்த்து சுழன்றடிக்கும் புயலானார்

வல்லடிமைத் தனத்தையே வாழ்வெல்லாம் எதிர்த்திட்டார்

வழக்கிலுள்ள சாதீய வேரினையே அறுத்திட்டார்

கல்லுருவை கைதொழுகிற கயமையை அழித்திட்டார்

கருத்தில்லா மதங்களையே களையெடுத்து ஒழித்திட்டார்"



ஈடில்லா இவருழைப்பு இல்லாவிடில் நாமில்லை

இவர் தொண்டை மறந்தால் இருந்துமுயிர் பயனில்லை

கேடில்லாச் சமுதாயம் கீழ்த்திசையில் தோன்றிடவே

கீழ்த்தட்டு மனிதனவன் கீர்த்திபெற்று ஓங்கிடவே

வீடெல்லாம் பகுத்தறிவு விளங்கியிருள் ஓடிடவே

விஞ்ஞானச் சிந்தனைகள் வேரூன்றி வலுப்பெறவே

பாடெல்லாம் பட்டவரை பகுத்தறிவுப் பகலவனை

பாராட்ட வார்த்தையில்லை; பாராட்டா மனிதரில்லை!

விடுதலை நாளேடு 23.12.1970

தமிழே


தமிழே நீ வாழியவே

நந்திவர்மன்

தென்னவர் குலமுதலே இருள்நீக்கும் திருவிளக்கே!

மென்மலர் நறுமணமே வான்மின்னும் வெண்ணிலவே!

மன்னவர் புகழ்முடியே அவர்கையில் தவழ்நிதியே!

என்னுள மாள்அரசி நின்இணையடி வாழியவே!


மங்கல மணிவிளக்கே குலமங்கையின் குழல்மலரே

பொங்கும் புதுப்புனலே வயல்நனைக்கும் பெருமழையே

எங்கும் படரொளியே வைகறையின் இளவெயிலே

சங்கத் தமர்தமிழே நின்மலரடி வாழியவே


ஒலியென விரைபுகழே நின்பெருமை உலகறியுமே

புலியென எழுநடையே உன்புலவர் கவிநடையே

நலிவிலா மொழிவளமே கவிநாவில் வளரமுதே

பொலிவெலாம் புனையுருவே நின்பொன்னடி வாழ்கவே


வான்போய் வருங்கலமே புவிவலம்வரும் விண்கலமே

மீன்போல் ஆழ்பொறியே கடல்மீதொளிர் நீள்படகே

கான்வீழ் அருவியே அதன்கனநடை மின்சாரமே

ஊண்தரும் உயிர்தரும் தமிழ்த்தாயே வாழியவே


பொறியியல் புதுமையே தௌ¤விளக்கும் அறிவொளியே

அறிவியல் அரும்படைப்பே அணுவாற்றல் நிகராற்றலே

நெறிநூல் ஒண்கருத்தே நிலைமாறிடா நீள்விசும்பே

செறிந்த புகழ்க்குவையே சீர்தமிழ் வாழியவே.

Pon-Ka-Ma-Ya, August, Sep-1993.